வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான அறிக்கையில் தவறான தகவல்களை பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருப்பதாகக் கூறி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில், தவறான தகவல்களை பரப்பும் வகையில் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகக்கூறி சென்னை மத்திய குற்றப்பிரவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், பீகார் மாநில பாஜக ட்விட்டர் பக்கத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக, பீகார் மாநில பாஜக மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக 4 பேர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கையில், உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் தொழில் மற்றும் சேவைத் துறையில் புலம்பெயர்ந்த நமது சகோதர, சகோதரிகளின் பங்களிப்பை தமிழ்நாட்டின் பொது மக்கள் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்றனர். ஆனாலும், வட இந்தியர்களைப் பற்றி திமுக எம்பிக்களின் கீழ்த்தரமான கருத்துகள், அவர்களை பானிபூரி வாலா என்று திமுக அமைச்சர் அழைத்தது மற்றும் அவர்களின் கூட்டணிக் கட்சியினர் வட இந்தியர்களை வெளியேற்றக் கோருவது போன்றவைதான் இன்றைய இந்த நிலைக்குத் தூண்டியுள்ளது என்று கூறியிருந்தார்.