‘பத்து தல’ திரைப்படம் முழுக்க முழுக்க ரீமேக் கிடையாது எனவும், 90% மாற்றியிருப்பதாகவும் படத்தின் இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், கெளதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் மார்ச் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. இதன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தின் முதல் பாடலும் டீசரும் திரையிடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசுகையில், “கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக உருவான இப்படம் குறித்து பேசி உயிர்ப்புடன் வைத்திருந்த அனைவருக்கும் நன்றி. படம் நன்றாகவே வந்திருக்கிறது. படம் வெளியானாலும் அது எப்படியான வெற்றியாக அமையும் என்ற கம்பேரிசன் பயமாக உள்ளது. இது அப்படியே ரீமேக் கிடையாது. 90% வேறொரு படமாக கொடுத்திருக்கிறேன்.
இரண்டு மூன்று காட்சிகள் மட்டும்தான் ஒன்றாக இருக்கும். சிலம்பரசன் சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் நிறைய சர்ப்ரைஸ் தருணங்கள் உண்டு. படத்தில் இன்னொரு சர்ப்ரைஸ் உள்ளது. இதில் சாயிஷா ஆர்யா எக்ஸ்க்ளூசிவாக நடனமாடியுள்ளனர். அதற்கான படப்பிடிப்பு இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்றார்.
நடிகர் கெளதம் கார்த்திக் பேசுகையில், “இந்தப் படம் நிச்சயம் ‘மஃப்டி’ போல இருக்காது. எஸ்.டி.ஆர்ருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய ப்ளஸ். அவருடன் நிறைய ஃபேன் மொமண்ட் இருந்தது. சக்தி சரவணன் எனக்கு ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக சொல்லிக் கொடுத்தார். என் சக நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். ஓபிலி கிருஷ்ணா முதலில் என்னை சந்தித்தபோது, ‘உன் கண்கள் ரொம்ப சாஃப்ட்டாக இருக்கு. அதிக கோபப்பட பழகிக்கோ’ என சொன்னார். அதை இப்போது வரை செய்து கொண்டிருக்கிறேன். படம் நிச்சயம் வெற்றியடையும்” என்றார்.
படத்தின் மிகப்பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா மார்ச் 18 அன்று நேரு விளையாட்டு உள்ளரங்கத்தில் நடைபெறுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் லைவ்வாக பாடல்களை மேடையில் பாட உள்ளார்.