நடிகர் விஜய் தனது படங்களின் பெயரை தமிழில் வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
“செஞ்சமர்’’ படத்தின் துவக்க விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக் கொண்டார். இவ்விழாவில் அவர் பேசுகையில், “பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை நெடுந்தொடராக எடுக்க வேண்டும் என நானும், இயக்குநர் வெற்றிமாறனும் பேசியிருக்கிறோம். ஒருநாள் நடக்கும். ஆனால், தற்போது அதற்கான அரசியல் சூழல் மற்றும் பொருளாதார சூழல் இல்லை.
மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த காசு இல்லை என்கிறார்கள். ஆனால், தேர்தல் வந்துவிட்டால் மட்டும் எங்கிருந்துதான் இந்தக் காசு வருகிறது எனத் தெரியவில்லை. மக்களை நினைத்தால் பாவமாக உள்ளது. ஸ்மார்ட் வாட்ச், செல்போன் வரை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். நம்ம ஊருக்கு எம்எல்ஏ வருவாரா என்ற நிலை மாறி எம்எல்ஏ இறந்து எப்போது இடைத்தேர்தல் வரும் என நிலை மாறி வருவது வருத்தமாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் விஜய்யின் ‘லியோ’ படத்தில் டைட்டில் குறித்து கேட்டதற்கு, “தமிழர்கள் தானே படம் பார்க்கிறார்கள். நாம் தான் நம் தாய் மொழியை சிதையாமல் பார்த்துகொள்ள வேண்டும். அந்தப் பொறுப்பு நடிகர் விஜய்க்கும் உண்டு. முன்பு தமிழில் பட பெயர்கள் வெளியிடப்பட்டன. தற்போது ‘பிகில்’, ‘பீஸ்ட்’ என பெயர்கள் வருகின்றன. அதை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.