கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸாரால் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென உயிரிழந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபை வேட்பாளர் நிமல் அமரசிறியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை விசாரணையில் நேற்று (28) திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
நேற்று (28) காலை நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது உயிரிழந்தவரின் உடல் பாகங்கள் அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அது தொடர்பான பரிசோதனைகளின் பின்னரே மரணத்திற்கான காரணத்தை அறிய முடியும் எனவும் கொழும்பு மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
அவர் கீழே விழுந்தாரா, கண்ணீர் புகை குண்டுகளால் இறந்தாரா அல்லது மாரடைப்பால் இறந்தாரா என்பது தெரியவரும் என்றார்.
உயிரிழந்தவரின் சடலத்தின் பிரேத பரிசோதனை சுமார் 3 மணி நேரம் நீடித்து, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, இறந்தவரின் உடல், அடக்கம் செய்வதற்காக தடயவியல் மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் இருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நிவித்திகல உள்ளூராட்சி சபைக்கு போட்டியிட எதிர்பார்த்திருந்த நிமல் அமரசிறி (61) கடந்த 26ஆம் திகதி கொழும்பில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது உயிரிழந்தார்.



