பழ.நெடுமாறன் கூறிய கருத்தில் அரசியல் உள்ளது. அவர் இருக்கிறார் என்ற கருத்து யாருக்கு தேவைப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவிற்கு நெருக்கடியை கொண்டு வந்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டுமென்பதால் இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்ட செய்தியாகவும் இருக்கலாம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் ஒரு உடலை காட்டி இதுதான் பிரபாகரன் என்றார்கள். அதை மட்டக்களப்பில் இருந்து முரளிதரனும், யாழ்ப்பாணத்திலிருந்து தயாவும் சென்று அடையாளம் காட்டியதாக படம் காட்டப்பட்டது.
அந்த உடல் பிரபாரனுடையது அல்ல, ஆனால் போரில் பிரபாகரன் வீரச்சாவடைந்திருக்கலாம் என பலர் கூறினார்கள். அவர் வீரச்சாவடைந்து விட்டார் என அப்போது கூறியவர்களிற்கு துரோகிப் பட்டம் சூட்டப்பட்டது.
2009 இல் யுத்தம் முடிந்த பின்னர் தலைவர் வீரச்சாவடைந்து விட்டார் என அஞ்சலி செலுத்த சுவிசிலுள்ள குலம் என்பவர் முயன்றபோது, அவருக்கு துரோகிப் பட்டம் சூட்டப்பட்டது. உயிரோடு உள்ளவருக்கு அஞ்சலியா என கேட்டனர்.
இப்பொழுது 13 வருடங்களின் பின்னர், தலைவர் இருக்கிறார் என பழ.நெடுமாறன் கூறியபோது, அவரை துரோக்கியாக பார்க்கப்படுகிறது.
அன்று, தலைவர் உயிரோடு இல்லையென்றவரை துரோகியென்றார்கள். இன்று, உயிரோடு இருக்கிறார் என்றவரை துரோகியென்கிறார்கள்.
நான் கூறுவது என்னவென்றால், உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. பழ.நெடுமாறன் என்ன ஆதாரத்தில் கூறினார் என்பதும் தெரியாது.
ஆனால், பழ.நெடுமாறன் கூறிய கருத்தில் அரசியல் உள்ளது. அவர் இருக்கிறார் என்ற கருத்து யாருக்கு தேவைப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவிற்கு நெருக்கடியை கொண்டு வந்துள்ளது. சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டுமென்பதால் இலங்கை அரசுக்கு கொடுக்கப்பட்ட செய்தியாகவும் இருக்கலாம்.
விடுதலைப் புலிகளை தடைசெய்துள்ள இந்தியாவில் இருந்துகொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் இருக்கிறார் என கூறியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.