இஸ்ரேலில் கி.மு.15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, இறந்த இரண்டு சகோதரர்களின் கல்லறையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபோது, அவர்களில் ஒருவருக்கு அவர் இறப்பதற்கு சற்று முன்பு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டனர்.
இம்மாதிரியான அறுவை சிகிச்சைகள் மண்டை ஓட்டு அறுவை சிகிச்சைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவை கிழக்குப் பகுதிகளில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மருத்துவ நடைமுறை- மண்டை ஓட்டில் ஒரு துளை வெட்டி சிகிச்சையளிக்கும் முறையின் மற்றொரு ஆதாரம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, “பண்டைய நகரமான டெல் மெகிடோவில் உள்ள ஒரு கல்லறையின் அகழ்வாராய்ச்சியின் போது கிமு 1550 முதல் கிமு 1450 வரையிலான வெண்கல காலத்தில் வாழ்ந்த சகோதரர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதில் மூத்த சகோதரர் (இவருடைய வயது 20 – 40 வயதுக்குள்ளாக இருக்கலாம்) மண்டை ஓட்டில் அறுவை சிகிச்சை செய்தற்கான தடயங்கள் இருந்தன. அவரது உச்சந்தலையில் வெட்டப்பட்டு, கூர்மையான, வளைந்த விளிம்பு கருவியால் மண்டை ஓட்டின் முன் எலும்பில் 30-மில்லிமீட்டர் (1.2-இன்ச்) சதுர வடிவ துளையை உருவாக்கபட்டுள்ளது.
இது தொடர்பாக நாங்கள் நடத்திய ஆராய்ச்சியில் மூளை தொடர்பான அறுவை சிகிச்சைகள் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகளவில் பரவலாக செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த தடயங்கள் மூலம் இப்பகுதியின் மருத்துவம் மற்றும் கலாச்சாரம் குறித்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
டெல் மெகிடோ நகரம் வெண்கல காலத்தில் வணிக ரீதியாக செல்வாக்கு மிக்க பகுதியாக இருந்தது. இது அரண்மனைகள், கோயில்கள் மற்றும் கோட்டைகள் நிறைந்த பணக்கார நகரம். நாங்கள் கண்டெடுத்த எலும்பு கூடுகளின் சொந்தக்காரர்களும் நல்ல வளமையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும். இருவரும் சமூகத்தின் உயர்மட்ட உயரடுக்கு உறுப்பினர்கள் அல்லது ஒருவேளை அரச குடும்ப உறுப்பினர்கள் என்று நம்புகிறார்கள். டிஎன்ஏ சோதனை மூலம் அவர்கள் சகோதரர்கள் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். மூத்த சகோதரருக்கு ஏன் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என உறுதியாக கூறமுடியவில்லை. எனினும் அவர்கள் இருவரும் கடுமையான நோய்வாய்ப்பட்டவர்கள் என்பது எலும்புக்கூட்டை பரிசோதித்த போது தெரிய வந்துள்ளது.
இந்த சகோதரர்கள் வெளிப்படையாக சில தீவிர நோயியல் சூழ்நிலைகளுடன் வாழ்ந்து வந்தனர், இந்த நேரத்தில், செல்வம் மற்றும் அந்தஸ்து இல்லாமல் சூழ்நிலையை சமாளிப்பது கடினமாக இருந்திருக்கும். உயரடுக்கினர் என்றால் அதிகமாக வேலை செய்ய வேண்டியதில்லை. சிறப்பு உணவை உண்ணலாம். பராமரிப்பாளர்கள் இருப்பார்கள். அதனால் கடுமையான நோயிலிருந்தாலும் நீண்ட காலம் உயிர்வாழ முடியும்.
இளைய சகோதரர் தனது பதின்பருவத்தில் அல்லது 20 களின் முற்பகுதியில் இறந்துவிட்டார், காசநோய் அல்லது தொழுநோய் போன்ற ஒரு தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
மூத்த சகோதரர் பற்கள் மற்றும் எலும்புகளை பாதிக்கும் கிளிடோக்ரானியல் டிஸ்ப்ளாசியா போன்ற மரபணு நிலையை அனுபவித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூத்த சகோதரருக்கு ஏன் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என உறுதியாக கூற முடியவில்லை. கால்-கை வலிப்பு, தலையில் அழுத்தம் போன்ற நோயினாலும், மரபணு நோயினாலும் பாதிக்கப்பட்டிருக்கலாம்” என்று கூறினர்.