நாட்டில் அனைத்து தேர்தல்களும் உரிய நேரத்தில் நடத்தப்படுவதை உறுதி செய்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி விக்ரமசிங்க, நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும், அதனைக் கடைப்பிடிப்பதற்கும் தான் சத்தியப்பிரமாணம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
அரசியலமைப்பு விதிகளுக்கு அமைய தொடர்ந்தும் செயற்படுவேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என அரச தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தற்போது தேர்தலை ஒத்திவைத்ததாக குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சட்டரீதியாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது குறித்த தீர்மானம் தேவையான கோரம் கொண்ட கூட்டத்தை கூட்டாமல், இரண்டு உறுப்பினர்களால் மட்டுமே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் குறித்து முடிவெடுப்பதற்காக கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாகவும், தலைவர் மற்றும் மற்றுமொரு உறுப்பினர் ஆகிய இரு உறுப்பினர்கள் மாத்திரமே பிரசன்னமாகியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் இரண்டு உறுப்பினர்களின் முன்னிலையில் தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் எஞ்சிய மூன்று உறுப்பினர்களிடமிருந்து அதற்கான சம்மதம் பெறப்பட்டதாகவும் ஜனாதிபதி விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
மூன்று உறுப்பினர்கள் தேர்தல் திகதியை முடிவு செய்யாததால், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று ஜனாதிபதி கூறினார்.
தேர்தலை முதலில் சட்டபூர்வமாக அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பிற கொடுப்பனவுகள் மற்றும் அத்தியாவசிய வேலைத்திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை வழங்குவதற்குத் தேவையான நிதியைக் கருத்தில் கொள்ளும்போது, தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் கூட, இந்தத் தருணத்தில் தேர்தலுக்கான நிதி திறைசேரியிடம் இல்லை என்றும் அரச தலைவர் மேலும் தெரிவித்தார்.
தாம் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவதாகவும், தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கமில்லை எனவும் ஜனாதிபதி விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும் 22 மில்லியன் இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவதும் தனது முன்னுரிமை என ஜனாதிபதி தெரிவித்தார்.