மட்டக்களப்பு திராய்மடுவில் உள்ள சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சிறுமிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
14, 15 மற்றும் 16 வயதுடைய இந்த சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை மற்றும் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுகளில் வசிப்பவர்கள் இந்த சிறுமிகள். அவர்கள் தலைக்கு அணியும் கிளிப் (hair pin) மூலம் தங்கியிருந்த அறை யன்னலின் இரும்பு கிரில்லை அகற்றி, ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அப்போது பெய்த கனமழை காரணமாக சிறுமிகள் தப்பியோடியதை சிறுவர் இல்லத்தின் பாதுகாப்பு அதிகாரி கவனிக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிறுமிகள் கடந்த ஆறு மாதங்களாக இந்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நன்கு திட்டமிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மூன்று சிறுமிகளையும் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.