வீதியில் நின்ற இரண்டு நாய்க்குட்டிகளை மிருகத்தனமாக காரை ஏற்றிச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
வீதியில் நின்ற இரண்டு நாய்க்குட்டிகளின் மீது கார் ஒன்று அலட்சியமாக ஏறிச் செல்வதும், கொல்லப்பட்ட நாய்க்குட்டிகளின் அருகில் தாய் சோகமாக அமர்ந்திருக்கும் காட்சிகளும் அண்மை நாட்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
காரை செலுத்தி வந்த 23 வயதான இளம் பெண் மதுரட்ட பொலிசார் நேற்று கைது செய்தனர்.
இந்த இளம்பெண் பதியபெல்லல்ல பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மனைவி எனவும், இவருக்கும் கோடீஸ்வர வர்த்தகருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த பெண் தனியாக காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது விபத்து நடந்தது.
இரண்டு நாய்க்குட்டிகள் மீது ஏறிச்சென்ங கார் அவரது கணவரின் சகோதரருக்கு சொந்தமானது என்று போலீசார் தெரிவித்தனர். அவர் டுபாயில் தொழில் செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீஸ் விசாரணையில், அந்தப் பெண் விபத்து நடந்ததை ஒப்புக்கொண்டார். எதிர் திசையில் இருந்து ஒரு பேருந்து வந்ததாகவும், மேலும் பல வாகனங்கள் அருகிலேயே நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அவ்வழியாக செல்ல இடம் குறைவாக இருந்ததாகவும், அதுவே விபத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். விபத்திற்குப் பிறகு தான் பயந்துவிட்டதாகவும், அதனால் தான் நிறுத்தாமல் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும் காவல்துறையிடம் கூறினார்.
விலங்கு வதை சட்டத்தின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த இளம் பெண்ணை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 23 வயதான இளம்பெண், மிருகவதை சட்டத்தின் கீழ் வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, அவர் ரூ.100,000 சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டார். வழக்கு ஜூன் 1 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.