தாமரைத்தடாக அரங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் எல்.எஸ்.பாலச்சந்திர மற்றும் முல்லைத்தீவு படைத்தலைமையத்தின் பிரிகேடியர் சுரேஷ் பெரேரா ஆகியோர், அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
பணிமூப்பை கணக்கெடுக்காமல் வாகனத்தை முந்திச் சென்றதாக குறிப்பிட்டு, இரண்டு அதிகாரிகளும் வீதியோரத்தில் தகராற்றில் ஈடுபட்டதையடுத்து இருவரும் பணி நீக்கப்பட்டனர்.
பெப்ரவரி 15 ஆம் திகதி தம்புள்ளையில் உள்ள இயந்திர காலாட்படை படைப்பிரிவில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற போது அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிலுவையில் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.
அதிகாரிகள் வகித்து வந்த பதவிகளை நீக்கியதுடன், அவர்களுக்கு வழங்கப்படும் பல வசதிகளும் குறைக்கப்பட்டுள்ளன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற எட்டு பிரிகேடியர்களில் பாலச்சந்திரவும் ஒருவர்.
அதிகாரிகள் தங்கள் மனைவிகளுடன் நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இராணுவ அதிகாரி ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேஜர் ஜெனரல் பயணித்த காரை,பிரிகேடியர் பயணித்த வாகனம் முந்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மேஜர் ஜெனரல், பிரிகேடியரின் காரை முந்திச் செல்லும்படி தனது சாரதிக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, மேஜர் ஜெனரலின் சாரதி பிரிகேடியரின் வாகனத்தை முந்திச் சென்று நிறுத்தினார். மேஜர் ஜெனரல் வாகனத்திலிருந்து இறங்கி பிரிகேடியரின் சாரதியை திட்டியுள்ளார். பணிமூப்பு பாராமல் வாகனத்தை முந்திச் சென்றதற்காக சாரதியை திட்டி அவரை தாக்க முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரலின் மனைவியும் காரில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, காரை விட்டு இறங்கிய பிரிகேடியர் சுரேஷ் பெரேரா, மேஜர் ஜெனரல் பாலச்சந்திர தனது சாரதியை தாக்க முற்பட்டபோது, தனது சாரதி எந்த தவறும் செய்யவில்லை எனவும், வீதியில் பயணிக்கும் போது பணி மூப்பு பின்பற்ற வேண்டும் என இராணுவ சட்டத்தில் கூறப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தில் ஒழுக்கம் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக இருப்பதால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.



