13வது திருத்தத்திற்கு எதிராக பிரதான பௌத்த பீடங்களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அவர்களிற்கு தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்த கடிதத்தின் தமிழ் வடிவம் வருமாறு-
மல்வத்தை பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர்
அஸ்கிரிய பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ ஞானரதாபிதான மகாநாயக்க தேரர்
அமரபுர பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய தொடம்பஹல ஸ்ரீ சந்திரசிறி மகாநாயக்க தேரர்
ராமஞ்ஞா பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய மகுலேவே விமலாபிதான தேரர் ஆகியோருக்கு ஒரு
திறந்த கடிதம்
வணக்கத்திற்குரிய மகாநாயக்க தேரர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்!
சுய அறிமுகம்
எனது ஆரம்பகால வாழ்க்கை குருநாகல் மற்றும் அனுராதபுரத்தில் தொடங்கியது. நான் சிறுவயதில் எங்கள் வீட்டு வருகையாளர்கள் அனைவரையும் மஹாபோதியைச் சுற்றி வந்து அவர்களுக்கு காட்டுவதற்கு மஹாபோதியின் எல்லைக்குள் கணிசமான நேரத்தைச் செலவழித்தேன். நான் ருவன்வெலிசாய மற்றும் ஏனைய விகாரைகள் மற்றும் சைத்திய போன்ற இடங்களுக்கும் எமது வருகையாளர்களுடன் சென்று வந்திருந்தேன். சுதந்திரம் என்று கூறப்பட்ட காலத்திற்கு முன்னர் 1940களில் சிங்கள பௌத்தர்களுக்கும் தமிழ் இந்துக்களுக்கும் இடையில் பெரும் அளவு புரிந்துணர்வும் நட்புறவும் இருந்தது. அநுராதபுரத்தில் இருந்த பழைய நகரத்தில் அதிக சதவீத தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
உண்மையில் கண்டிய “உடரட” சிங்களவர்கள் டொனமோர் ஆணையாளர்களிடம் கூட்டாட்சியையே கேட்டிருந்தனர். அப்போதைய தமிழர் தலைவர் மட்டும் சுயநலமாக 50:50ஐக் கேட்பதற்குப் பதிலாக கூட்டாட்சியைக் கேட்டிருந்தால், டி.எஸ்.சேனநாயக்கா மற்றும் சர் ஒலிவர் குணதிலக்க ஆகியோர் இங்கிலாந்தில் இருந்த சோல்பரி கமிஷனர்கள் மீது ஒற்றையாட்சி அரசியலமைப்புக்காக செல்வாக்கு செலுத்த முயற்சித்த போதிலும், எங்களுக்கு ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு கிடைத்திருக்கும்.
1957 ஆம் ஆண்டு ஒப்பீட்டு மதங்களுக்காக றோயல் கல்லூரியில் மக்கீன் நினைவுப் பரிசைப் பெற்றேன். எனது மாணவப் பருவத்திலிருந்தே எனக்கு ஒப்பீட்டு மதங்களில் ஆர்வம் இருந்தது. பௌத்தம் மற்றும் இலங்கையில் உள்ள ஏனைய மதங்கள் பற்றி எனக்கு ஓரளவு அறிவு உண்டு.
1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வ சமயப் பேரவையின் உதவிச் செயலாளராக நான் இருந்தேன். திரு. எஸ்.என்.பி.விஜேகோன் அதன் செயலாளராக இருந்தார். இது பின்னர் 1970 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க சட்டமாக சட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. அப்போதைய மல்வத்தை மகாநாயக்க தேரர் யாழ்ப்பாணத்திற்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொள்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம். அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். கௌரவ டட்லி சேனநாயக்கா அவர்கள் பிரதமராக இருந்த அரசியல் தலைமையின் கீழ், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முன்னோடியாக இத்தகைய ஏற்பாடுகள் கருதப்பட்டன.
ஆனால் கௌரவ டட்லி சேனாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் ஓரளவு சமாதானம் நிலவிய போதிலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை. சர்வ மதப் பேரவையின் ஆரம்ப உறுப்பினர்களில் நான் மட்டுமே இன்று உயிருடன் வாழ்கின்றேன் என்று நம்புகின்றேன்.
நான் டாக்டர் இ.டபிள்யூ.அதிகாரம் மற்றும் வழக்கறிஞர் திரு.சண்முகநாயகம் ஆகியோருடன்; உலகப் புகழ்பெற்ற தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பற்றாளர்களாக இருந்தோம். பௌத்த தத்துவத்துக்கும் கிருஷ்ணஜியின் தத்துவத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை நாம் பார்த்திருக்கின்றோம். கடைசியாக அடையாறில் கிருஷ்ணஜியைச் சந்தித்தபோது “நீங்கள் இதுவரையில் கேட்டது போதும் நீங்கள் பெற்ற அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய தருணம் வந்து விட்டது” என்றார். கிருஷ்ணஜியும் மற்றவர்களும் எனக்கு அளித்த நம்பிக்கைதான் இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டியது.
குறுகிய காரணிகளால் கட்டுப்படுத்தப்படும் ஒருவனல்ல நான் என்பதை புனிதமான உங்களுக்குத் தெரிவிக்கவே இந்த உண்மைகளைக் குறிப்பிடுகின்றேன். இலங்கையின் இனப்பிரச்சினையை விஞ்ஞான ரீதியாகவும் சமூக மற்றும் மத ரீதியாகவும் ஆராய்வதே எனது ஒரேயொரு குறிக்கோள்.
வணக்கத்திற்குரிய உங்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம்.
வணக்கத்திற்குரியவர்களே!
பதின்மூன்றாவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதிக்கு நீங்கள் அண்மையில் அனுப்பி வைத்த நிருபத்தைப் பற்றி நான் இங்கு குறிப்பிடலாமா? பத்திரிகை தினக்குரலின் படி (தமிழில்) வணக்கத்திற்குரிய நீங்கள் நால்வரும் பின்வருமாறு கூறியுள்ளீர்கள்-
1. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பதற்கான உரிமையை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம், அது பிரிவினைக்கு வழிவகுக்கும்.
2. அது ஏற்படுத்தக்கூடிய உறுதியற்ற தன்மையை உணர்ந்து முந்தைய ஜனாதிபதிகள் பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நிர்வகிக்கவில்லை.
3. நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் கடப்பாடு ஜனாதிபதிக்கு உள்ளது. பதின்மூன்றாவது திருத்தத்தை நிர்வகிப்பது மக்களைக் கொதிப்படையச் செய்யும்.
4. இந்த நாடு இப்போது பொருளாதார முட்டுக்கட்டையை எதிர்கொள்ளும் நிலையில் பொருளாதார நலன்களை வழங்குவதற்காக சக்தி வாய்ந்த நாடுகள் விதிக்கும் விருப்பங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு சம்மதிப்பதை ஜனாதிபதி தவிர்க்க வேண்டும்.
5. ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
மேலே கூறப்பட்ட கூற்றுக்களை ஆராய்வோம்.
1. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பதற்கான உரிமையை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலம், அது பிரிவினைக்கு வழிவகுக்கும்.
பதில்
தொல்பொருள் இடங்கள் மற்றும் சமய வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பதற்கான உரிமையுடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு; ஜனாதிபதி வழங்கினால் இந் நாட்டின் ஒவ்வொரு மாகாண சபையும் பிரிவினையைக் கோரும் என நீங்கள் கூறுகின்றீர்களா? அப்படியானால், அவ்வாறு அவர்கள் கோரட்டுமே! சுவிட்சர்லாந்தில் 20 கண்டொன்கள் உள்ளன. மத்திய அரசின் சில உரிமைகளுக்குக் கட்டுப்பட்டு ஒவ்வொரு மாகாணமும் சுதந்திரமாகவும் தனித்தனியாகவும் செயல்பட அனுமதிக்கும் வகையில் சுவிட்சர்லாந்தில் உள்ளதைப் போன்ற ஒரு கூட்டமைப்பை நாம் உருவாக்க முடியுமல்லவா?
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த ஏனைய மாகாணங்கள் சுதந்திரமாகச் செயற்பட விரும்பாது, வடக்கும் கிழக்கும் மாத்திரம் பிரிபடக்கோருவார் என வணக்கத்திற்குரிய தேரர்கள் நீங்கள் கருதினால், வடக்கும் கிழக்கும் தமிழ்ப் பேசும் பிரதேசங்கள் என்பதாலேயே பிரிந்து செல்ல அவர்கள் விரும்புவார்கள் என நீங்கள் ஊகிக்கின்றீர்கள் என்று அர்த்தம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சிங்கள ஆளுகைக்குட்பட்ட மத்திய அரசின் நுகத்தடியில் வாழ தமிழர்கள் விரும்பவில்லை என்றும், எனவே வடக்கு, கிழக்கு தமிழ்ப் பேசும் மக்களுக்கு எந்த வித சுதந்திரமும் வழங்காமல் அவர்கள் தங்களைத் தாமே ஆளவிடாது பலவந்தமாக சிங்களவர்களின் காலடியில் அவர்கள் வைக்கப்பட வேண்டுமெனத் தேரர்களாகிய நீங்கள் நம்புகின்றீர்களா?
இத்தகைய சிந்தனையே நாட்டில் பொருளாதார ஸ்திரமின்மையை ஏற்படுத்தியது அல்லவா? இந்த நாடு இனியும் எவ்வளவு காலம் தமிழர்களுக்கு எதிரான போருக்குத் தயாராகி, இராணுவத்தைத் தயார் நிலையில் வைத்திருக்கப் பெரும் அன்னியச் செலாவணியைச் செலவழிக்கப் போகின்றது? மேலும் சிங்களவர்கள் ஆக மோசமாகப் பார்த்தால் எதற்காகப் பயப்படுகின்றார்கள்? வடக்கு கிழக்குத் தமிழர்கள் தனியாகப் பிரிந்து தமிழீழத்தை உருவாக்குவார்கள் என்றா? இது சிங்களவர்களை எவ்வாறு பாதிக்கப்போகின்றது? வடக்கிலும், கிழக்கிலும் பெரும் எண்ணிக்கையில் சிங்களவர்கள் எந்தக்காலத்திலும் வாழ்ந்ததில்லை. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த எச்சங்கள் பௌத்த தமிழர்களின் காலத்தில் இருந்தவை. (சிங்கள மொழியில் பேராசிரியர் சுனில் ஆரியரத்னவின் தெமல பௌத்தயோ என்ற நூலைப் பார்க்கவும்).
எவ்வாறாயினும் தெமல பௌத்தயோக்களின் காலத்தில் சிங்கள மொழி பிறக்கவில்லை. கி.பி 6 ஆம் மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில்த் தான் சிங்கள மொழி உருவானது. சிங்கள மொழி பேசுபவர்களை மட்டுமே சிங்களவர்களாக அடையாளப்படுத்த முடியும். மகாவன்ச சிங்களவர் என்றழைக்கப்படும் மக்களைப் பற்றியோ அல்லது சிங்களம் என்ற மொழியைப் பற்றியோ குறிப்பிடவில்லை! மகாவன்ச காலத்தில் சிங்களவர் வாழ்ந்ததில்லை.
தமிழர்களைக் கட்டுப்படுத்துவதற்கு சிங்களவர்களுக்கு எந்தவிதமான நியாயமான உரிமைகளும் இல்லை என்பதை வணக்கத்துக்குரிய பெருமக்களாகிய நீங்கள் அறிந்திருப்பதால்த்தான் பிரிவினையைப் பற்றி நீங்கள் கவலைப்படுகின்றீர்களா?
அதனால்த்தான் தமிழர்களை அடிபணிய வைக்க அவர்கள் மீது பலத்தையும் வன்முறையையும் பிரயோகிக்க விரும்புகின்றீர்கள், இல்லையா? பௌத்தம் உங்கள் வணக்கங்களுக்குக் கற்றுக் கொடுத்தது என்ன? அக்கன சூத்திரத்தில், (துகா-நிகோயத்தில்) பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
“அரசர், உலகத்தின் ஆட்சியாளர், தர்ம குணம் பொருந்திய தர்ம அரசர் தர்மத்தை மட்டுமே நம்பியிருப்பார். தர்மத்தை மதிப்பார், தர்மத்தை பூஜிப்பார், தர்மத்தை உயர்வாகக் கணிப்பார். தர்மத்தையே தனது தரமாகக் கொண்டு, தர்மத்தைத் தனது பதாகையாகக் கொண்டு, தர்மத்தைத் தனது ஆணையாகக் கொண்டு, அவர் தனது எல்லைக்குள் உள்ள மக்களுக்கு ஒரு தர்மக் கண்காணிப்பு மற்றும் தடை மற்றும் பாதுகாப்புகளை, போர்வீரர் மற்றும் முகாமின் பின்பற்றுனர், பிராமணர் மற்றும் குடும்பத்தினர்;, நகரம் மற்றும் கிராம மக்கள், ஒதுங்கியவர்கள் மற்றும் தெய்வீக மனிதர்கள். மிருகம் மற்றும் பறவை ஆகியவற்றுக்கு சமமாக உருவாக்கி வைப்பார்.”
எனது மதிப்பிற்குரிய மகாநாயக்க தேரர்களே! அஹிம்சை தர்மத்தின் ஒரு பகுதி இல்லையா? அஹிம்சை என்ற சொல் இந்து, பௌத்தம் மற்றும் ஜைன மதங்களால் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு முக்கியமான ஆன்மீகக் கோட்பாடு ஆகும். இதன் பொருள் “காயத்தை உண்டு பண்ணாதே” மற்றும் “கொல்லாதே” என்பன. செயல்களால் மட்டுமல்ல, வார்த்தைகளாலும் சிந்தனையாலும் எந்த வகையான உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிப்பதை அஹிம்சை முற்றிலும் தவிர்க்கிறது. உங்களைப் போன்ற திறமையும் உணர்வும் கொண்ட பிக்குகள் எப்படி எங்கள் மக்களில் ஒரு பிரிவினருக்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றைப் போதிக்க முடியும்?
தமக்கு உரிமை கோருவதற்கும் அனுபவிப்பதற்குமான உரிமையை சர்வதேச சட்டம் வழங்கும் ஒன்றையே வடக்கு கிழக்குத் தமிழர்கள் கேட்கின்றார்கள். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் பிரிவு 1 பின்வருமாறு கூறுகிறது- “அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உள்ளது. அந்த உரிமையின் மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நிலையை சுதந்திரமாக தீர்மானிக்கின்றார்கள். மற்றும் அவர்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சியை சுதந்திரமாக அவர்கள் தீர்மானிக்கலாம்”
மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களையும், தொல்பொருள் இடங்களையும், சமய வழிபாட்டுத் தலங்களையும் தமது சொந்தப் பிரதேசங்களில் நிர்வகிப்பதற்கான உரிமையையும் வழங்காதது, தமிழர்களை சிங்கள ஆட்சியாளர்களின் மேலாதிக்கத்தின் கீழ் சுதந்திரம் இல்லாமல் தொடர்ந்து வைத்திருக்கும் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? அதைத்தான் மிக உயர்ந்த பௌத்த பிக்குகளாகிய நீங்கள் வேண்டுகின்றீர்களா? அதாவது தமிழர்களுக்கு ஹிம்சை செய்யவா ஆசைப்படுகின்றீர்கள்?
எமது ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கிற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரிவினைக்கு வழிவகுக்காது. இது வடக்கு மற்றும் கிழக்கில் மத்திய அரசாங்கமும்; அதன் முகவர்களும் மேற்கொள்ளும் கேடுகெட்ட செயல்களைக் குறைத்து ஓரளவு கட்டுப்படுத்தக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கில் மத்திய அரசு செய்யும் தவறுகளை, வடக்கு மற்றும் கிழக்கிற்கு சட்டப்படி உரிமையுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டாம் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து, நிரந்தரமாக அவற்றை நிலை நிறுத்துவதுதான் உங்கள் விருப்பமா?
2. அது ஏற்படுத்தக்கூடிய உறுதியற்ற சூழலை உணர்ந்து முந்தைய ஜனாதிபதிகள் பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நிர்வகிக்கவில்லை.
பதில்
முன்னைய ஜனாதிபதிகள் தமது குறுகிய நோக்குப் பார்வையினால் இந்த நாட்டிற்குள் உள்நாட்டுப் போரைக் கொண்டு வரும் சூழ்நிலைகளை உருவாக்கவில்லையா? ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் முட்டாள்தனமான கூற்றல்லவா “தமிழர்களுக்கு யுத்தம் வேண்டுமானால் யுத்தம் செய்யட்டும்; அவர்கள் அமைதியை விரும்பினால் அவர்கள் அமைதி பெறட்டும்” என்பது இது முப்பது ஆண்டுகளுக்கு போருக்கான உத்வேகத்தை அளித்தது. பதின்மூன்றாவது திருத்தம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகளால் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருந்தால் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் எழுந்திருப்பன. எனினும் பதின்மூன்றாவது திருத்தம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாகாது. கூட்டாட்சி ஒன்றே எமது இனப்பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கவல்லது. எனினும் பதின்மூன்றாவது திருத்தத்தை நிர்வகிக்காதது பாரிய உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியது. பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக நிர்வகிப்பது எமது அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வாகாது என்ற போதிலும் ஏன் பதின்மூன்றாவது திருத்தத்தின் முழு நிர்வாகத்தையும் முயற்சிக்கக்கூடாது? அது முப்பது வருட யுத்தத்தை விடவா மோசமான எதனையும் ஏற்படுத்திவிடும்?
ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பதை நாம் உண்மையில் கண்டறிய முடியும்.
3. நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் கடப்பாடு ஜனாதிபதிக்கு உள்ளது. பதின்மூன்றாவது திருத்தத்தை நிர்வகிப்பது மக்களைக் கொதிப்படையச் செய்யும்.
பதில்
வணக்கத்திற்குரியவர்களே! எந்த இறையாண்மை பற்றி நீங்கள் பேசுகின்றீர்கள்? வடக்கு கிழக்கு தமிழர்கள் வரலாற்று ரீதியாகவும் உண்மையிலும் ஒரு தேசத்தவர். அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட தாயகம், தனித்துவமான மொழி, கலாச்சாரம் மற்றும் கூட்டுச் சிந்தனை ஆகியன உள்ளன. சிங்களவர்களைப் போலவே, போர்த்துகீசிய காலனித்துவ ஆக்கிரமிப்பினாலும் டச்சுக்காரர்களினதும் பின்னர் ஆங்கிலேயர்களினதும் ஆக்கிரமிப்பினாலும் தங்கள் இறையாண்மையை தமிழரும் இழந்தனர். ஆங்கிலேயர்கள் ஆட்சியை ஒப்படைத்த போது தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கத் தவறிவிட்டனர். சுதந்திரம் என்று சொல்லப்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்தவர்களிடம் அரசாங்கம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அது வடகிழக்குத் தமிழர்களின் தேசியத்தை இல்லாதாக்கவில்லை. சுதந்திரம் என்று அழைக்கப்பட்ட காலத்திலிருந்து முப்பது வருடங்களாக இறையாண்மையைப் பகிர்ந்து கொள்வதற்கான தமது வரலாற்று ஜனநாயகப் போராட்டத்தை தமிழர்கள் தொடர்ந்தனர். ஆனால் 1972 அரசியலமைப்பு வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர்களின் தேசியத்தை அங்கீகரிக்கத் தவறிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் தங்கள் எதிர்ப்பைக்; காட்டினர். 1978 அரசியலமைப்பும் அவ்வாறே அமைந்தது. ஒரு வரலாற்று மற்றும் இருத்தலியலின் உண்மையை புதிய அரசியலமைப்பில் அங்கீகரிக்காததற்காக தமிழ்ப் பிரதிநிதிகள் மீண்டும் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
சுதந்திரம் கிடைத்தது என்று அழைக்கப்பட்ட நாள் முதல் முப்பது ஆண்டுகளின் போது ஜனநாயக வழிமுறைகள் தோல்வியடைந்தன. அதனால் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு ஒரு போர் நடந்தது. 2002 ஆம் ஆண்டு சர்வதேச ஆதரவுடன் நடைபெற்ற சமாதான முன்னெடுப்புகளின் போது வடக்கிலும் கிழக்கிலும் ஏறக்குறைய முப்பது வருடங்களாக ஒரு நடைமுறையான தமிழ் மாநிலம் வன்முறைச் சம்பவங்களின் போது இருந்தது என்பது மௌனமாக அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த தேர்தலில், சம்பாதித்த தமிழர் இறையாண்மையை, எம் மக்கள் முழுமையாக அங்கீகரித்தனர்.
ஒரு தேசம் என்பது ஒரு நாடு அல்லது மாநிலத்திலிருந்து வேறுபட்டது. ஒரு நாட்டில் பல தேசங்கள் அருகருகே வாழலாம். ஒரு தேசத்தின் இறையாண்மை என்பது அந்த நாட்டின் இறையாண்மையிலிருந்து சுயாதீனமாக இயங்குகின்றது. பொதுவான ஆதித்தோற்றம், மொழி மற்றும் வரலாற்றைக் கொண்ட மக்களைக் கொண்டுள்ளதே ஒரு தேசம் என்பது. இது போன்ற பல தேசங்கள்; அருகருகே ஒரு நாட்டில் வாழலாம். ஒரு தேசத்தின் இறையாண்மையை நாடானது தனக்குத் தானே இறையாண்மை என்று கூறிப்பறித்துக்கொள்ள முடியாது.
இந்த விடயங்களில் எல்லாம் மக்களுக்கு போதிய அறிவு இருந்தால் எமது மக்கள் கொதிப்படைய வேண்டிய அவசியமில்லை. வடக்கு, கிழக்கு மக்களுக்காக ஐ.நாவினால வாக்கெடுப்பு நடத்தினால், எமது மக்களைக் கோபப்படுத்தக்கூடிய எதுவும் இருக்காது. மக்கள் எடுக்கும் முடிவை அவர்கள் ஏற்க வேண்டியிருக்கும்.
4. இந்த நாடு பொருளாதார முட்டுக்கட்டையை எதிர்கொள்ளும் போது பொருளாதார பலன்களை வழங்குவதற்காக சக்தி வாய்ந்த நாடுகள் விதிக்கும் விருப்பங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு சம்மதிப்பதை ஜனாதிபதி தவிர்க்க வேண்டும்.
பதில்
இந்த நாட்டின் பொருளாதார முட்டுக்கட்டைக்கு நிச்சயமாகப் பெரும் பொருட்செலவில் போரை நடத்தியதே காரணம். நிறைய இடைத்தரகர்கள் கமிஷன் மற்றும் வெட்டுக்களில் மில்லியன்களை சம்பாதித்தனர். ஆனால், பொதுப்பணித்துறையை அரசியல் மயமாக்கியதாலேயே நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தது. சில அரசியல்வாதிகளின் தற்பெருமையை உயர்த்துவதற்காக இலங்கைக்கு உடனடியாகப் பணம் வழங்கிய சீனாவின் ஆசைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அப்போதைய அரசாங்கம் இணங்கவில்லையா? அனைத்து சக்தி வாய்ந்த நாடுகளும் இலங்கை நாடு செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டவே முயற்சிக்கின்றன. மகாநாயக்க தேரர்களான உங்களால் ஏன் அந்த சக்தி வாய்ந்த நாடுகள் கூறுவதை புரிந்து கொள்ள முடியாது இருக்கின்றது. அவர்களின் அறிக்கைகளை நீங்கள் ஏன் புறநிலையாக வைத்து ஆராயவில்லை? காலாம சூத்திரத்தை நான் உங்களுக்கு நினைவூட்ட வேண்டியதில்லை.
அதில் “காலாம மக்களே! நீங்கள் சந்தேகப்படுவது, நிச்சயமற்றதாக இருப்பது சரியானதே. சந்தேகத்திற்குரியன பற்றி உங்களுக்குள் நிச்சயமற்ற தன்மை எழுந்துள்ளது. காலாம மக்களே! வாருங்கள்! திரும்பத் திரும்பக் கேட்டு உள்வாங்கியதை அதற்காக ஏற்றுக்கொள்ளாதீர்கள் அல்லது பாரம்பரியத்தின் அடிப்படையில் வந்ததை ஏற்காதீர்கள் அல்லது வதந்தியின் அடிப்படையில் வந்தனவற்றை ஏற்காதீர்கள் அல்லது வேத நூல்களில் இருப்பதால் அவற்றை ஏற்காதீர்கள் அல்லது யூகத்தின் அடிப்படையில் அவற்றை ஏற்காதீர்கள் அல்லது ஒரு கோட்பாட்டின் நிமிர்த்தம் ஏற்காதீர்கள் அல்லது விசேடமான நியாயத்தின் அடிப்படையில்; அவற்றை ஏற்காதீர்கள் அல்லது சிந்திக்கப்பட்ட ஒரு கருத்தை நோக்கிய ஒரு சார்புக் கருத்தை ஏற்காதீர்கள் மற்றவரின் வெளித்தோற்றத் திறனின் அடிப்படையில் அவர் கூறியவற்றை ஏற்காதீர்கள் அல்லது “இந்தத் துறவி எங்கள் ஆசிரியர்” என்ற கருத்தில் அவர் கூறியவற்றை ஏற்காதீர்கள்.
காலாமக்களே! உங்களுக்கு ‘இவை மோசமானவை; இந்த விடயங்கள் குற்றஞ்சாட்டத்தக்கவை; இவை ஞானிகளால் கண்டிக்கப்படுகின்றவை; இவற்றைக் கடைப்பிடிப்பது தீமைக்கும் வருத்தத்திற்கும்; வழிவகுப்பன என்று நீங்கள் கண்டால் அவற்றைக் கைவிடுங்கள்!”
வணக்கத்திற்குரியவர்களே! உங்கள் ஆவேசமான கூற்றுகளால் இந்த நாட்டு மக்களை தவறான மற்றும் அதன பாதாளத்தினுள் வீழ்த்தும் வழியில் அவர்களை நடத்த வேண்டாம்!
5. ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
பதில்
எமது ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் உள்ள தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதால் ஜனாதிபதி அவர்கள் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையான சிங்கள மேலாதிக்கத்தை தீர்க்கப் போவதில்லை. இந்த நாடு பிச்சைக் கிண்ணத்துடன் உலகம் சுற்றும் வேளையில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் உலக நாடுகளுக்கு இந்த நாட்டை நல்ல வெளிச்சத்தில் காட்ட முடியும் என்பதே ஜனாதிபதியின் உள் எண்ணம்!
சிங்கள மக்களும் அவர்களது அரசியல்வாதிகளும் எம்மீது கொண்டுள்ள மேலாதிக்கப் பிடியில் இருந்து வெளிவருவதற்கு நாம் கூட்டாட்சி முறையைக் கேட்கின்றோம்.
தமிழர்களுக்கு எதையும் கொடுக்காதீர்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். உங்கள் ஜனாதிபதியுடன் ஒப்பிடும்போது நீங்கள் தீவிரவாதத்தின் பக்கம் இருப்பதை நீங்கள் அவதானித்தீர்களா? புத்தபிரான் மத்திய பாதையைப் போதித்தார் என்று நினைத்தேன்!
மதிப்பிற்குரிய தேரர்களே! நடந்த உண்மையைச் சொல்கின்றேன். டி.எஸ்.சேனநாயக்க அவர்கள் சோல்பரி ஆணையாளர்களின் மேல் பிழையான வழியில் செல்வாக்கு செலுத்த அவர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் அந்த ஆணையாளர்களை சந்திக்க ஓ.ஈ.குணதிலக அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்பினார். எதற்காகவோ டி.எஸ்.சேனாநாயக்க அவர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பையே விரும்பினார். அது ஒட்டுமொத்த அரசியல் அதிகாரங்களையும் மத்திய அரசாங்கத்திற்கும் அதனூடாக பெரும்பான்மை சமூகமான சிங்களவர்களுக்கும் வழங்கும் என்ற காரணத்தினால் ஆகும் என்று நினைக்கின்றேன்.
ஒரு ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் முழு நாட்டிலும் அதற்குரிய பிடியையும்; சிங்களவர்கள் பெற்றதன் மூலம், தீவு முழுவதும் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மூலம் பெற்ற பிடியை இழக்க எந்த ஒரு சிங்கள அரசியல்வாதியும் இப்போது தயாராக இல்லை.
வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் மக்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை சிங்களவர்களுக்கு வழங்குவது ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டமே. சிங்களவர்களுக்கு வரலாற்று ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ வடக்கு மற்றும் கிழக்கின் மீது எந்த ஒரு உரித்தோ உரிமையோ இல்லை.
தமிழ் பேசும் மக்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளனர். நான் சொல்லும் இந்த சரித்திர உண்மையை நீங்கள் ஏற்கவில்லை என்றால், இந்த நாட்டின் புராதன வரலாற்றை உத்தியோகபூர்வமாக எழுதுவதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், இந்திய மற்றும் சர்வதேச வரலாற்றாசிரியர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமிக்குமாறு மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களிடம் நீங்கள் கேட்கலாம். அப்போது உண்மை புலப்படும்.
நன்றி.



