நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி, ராஜாஜிபுரம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சில நாட்களுக்கு முன் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று முன்தினம் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அன்பு தென்னரசன் உள்பட பலர் ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, சீமானின் பேச்சு குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அவர்களுடன் திமுகவினரும் சேர்ந்து கொண்ட நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், அன்பு தென்னரசனின் தலையில் காயம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அங்கு வந்த போலீஸார் இரு தரப்பினரிடமும் புகார்களைக் பெற்றுக் கொண்டு கலைந்து போகச் செய்தனர்.
நேற்று காலை ராஜாஜிபுரத்தைச் சேர்ந்த மக்கள் சிலர், திருநகர் பேருந்து நிறுத்தம் அருகே திரண்டு, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி ஆனந்த குமார் தலைமையிலான போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டனர். அப்பகுதியில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நேற்று அப்பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் தடுத்து திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ்குமார் தலைமையிலான கட்சியினர் அளித்த மனு விவரம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறிப்பிட்ட பிரிவு மக்களை இழிவாக பேசியுள்ளார்.
வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.