தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ளது பிளவல்ல, அது தொழில்நுட்ப ரீதியிலான ஒரு உத்தியென திடீர் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது இலங்கை தமிழ் அரசு கட்சி. தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு தமிழ் அரசு கட்சி வெளியேறிய போதே, தொழில்நுட்ப ரீதியிலான காரணத்தைத்தான் சொன்னது. ஆனால், தமிழ் அரசு கட்சியின் முடிவு பொதுமக்களிடம் ஏற்படுத்தியுள்ள அதிருப்தியை தொடர்ந்து, பிரச்சாரத்தில் புதிய உத்தியை பாவிக்க ஆரம்பித்துள்ளனர்.
அதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்படவில்லை, பிரிந்து தேர்தலில் போட்டியிடுகிறோம், தேர்தலின் பின்னர் இணைந்துதான் ஆட்சியமைப்போம் என கூறி வருகிறார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறிய போது இந்த பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொள்ளவில்லை. ஆனால், தமிழ் அரசு கட்சி கூட்டமைப்பை உடைத்தார்கள் என்ற பொதுமக்கள் அதிருப்தியை நாடி பிடித்ததும், இப்பொழுது பிரச்சாரத்தில் சுருதி மாற ஆரம்பித்துள்ளது.
ஆனால், இலங்கை தமிழ் அரசு கட்சி சொல்வதை போல, உள்ளூராட்சிசபை தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பும், இலங்கை தமிழ் அரசு கட்சியும் இணைந்து ஆட்சியமைக்க வாய்ப்பிருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதே அடிப்படை இயல்பு என்ற போதும், மேலும் சில பின்னணி தகவல்களையும் வாசகர்கள் அறிந்து கொள்ள, அவற்றை குறிப்பிடுகிறோம். இந்த தகவல்களின் அடிப்படையில், மீண்டும் இணைந்து ஆட்சியமைக்க ஏதாவது வாய்ப்பிருக்கிறதா என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
யாழ் மாநகரசபையின் புதிய முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் தோல்வியடைந்து விட்டது. இரண்டாவது முறையாக விரைவில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார். ஆர்னோல்ட்டின் வரவு செலவு திட்டம் வெற்றியடைவதென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரிக்க வேண்டும். ஆனொல்ட் இறுதியாக வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு அதை ஆதரிக்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் அரசு கட்சியும் தேர்தலின் பின்னர் இணைந்து ஆட்சியமைக்க வாய்ப்பிருந்தால், யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டத்தில் ஒருமித்து வாக்களித்திருப்பார்கள். தமிழ் அரசு கட்சியின் முதல்வர் வேட்பாளரை தோற்கடிக்கும் விதமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டது, தெளிவான செய்தியை சொல்கிறது.
அதாவது, தேர்தலின் பின்னரும் இரு தரப்பும் இணைந்து ஆட்சியமைப்பது சாத்தியமற்றது.
யாழ் மாநகரசபை வரவு செலவு திட்டத்தை முதல்வர் ஆனோல்ட் கடந்த 14ஆம் திகதி சமர்ப்பித்தார். தோல்வியடைந்தது. ஆதரவாக 14 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. யாழ் மாநகரசபையின் நடப்பு ஆயுட்காலத்தில் ஆனோல்ட் சமர்ப்பித்த 7வது வரவு செலவு திட்டம் இது. இதில் 6 வரவு செலவு திட்டங்கள் தோல்வியடைந்தன.
14ஆம் திகதி வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை உறுதி செய்ய தமிழ் அரசு கட்சி விரும்பியது.
ரெலோ, புளொட் தரப்பின் 6 மாநகரசபை உறுப்பினர்கள் பதவியில் உள்ளனர். அதில் ரெலோவின் பெண் உறுப்பினர் ஒருவர் பல்டியடித்து விட்டார். அவர் இப்பொழுது தமிழ் அரசு கட்சியுடன் ஒட்டிவிட்டார்.
ரெலோ தரப்பின் தனேந்திரனும், புளொட் தரப்பின் நித்தியானந்தனும் ஆனோல்ட்டின் வலையில் உள்ளனர். கட்சியின் முடிவை மீறி ஆனோல்ட்டிற்கு ஆதரவளித்து வருபவர்கள்.
வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிதற்கு முன்னதாக, உறுப்பினர்கள் மட்டத்தில் தமிழ் அரசு கட்சி டீல் செய்தது. இரண்டு கட்சிகளுடனும் பேசாமல், உறுப்பினர்களுடன் பேசினார்கள்.
ஆனோல்ட் முதல்வராக பதவியேற்றதே, இரண்டு தரப்பு உறுப்பினர்களும், கட்சிகளிற்கு டிமிக்கி கொடுத்து விட்டு, ஆனோல்ட்டிற்கு விசுவாசமாக செயற்பட்டதால்தான். முதல்வர் தெரிவின் போது, ரெலோ, புளொட் உறுப்பினர்களை சபை கூட்டத்திற்கு சமூகமளிக்க வேண்டாமென கட்சித்தலைமை அறிவுறுத்தியிருந்தது. அவர்கள் கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்படி செயற்பட்டிருந்தால், சபையை கூட்ட தேவையான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாமல், சபை கூட்டப்பட்டிருக்காது. ஆனோல்ட் முதல்வராகியிருக்க முடியாது.
இரண்டு கட்சிகளின் உறுப்பினர்களும், கட்சி தலைமையின் அறிவுறுத்தலை மீறி கூட்டத்தில் சமூகமளித்த விவகாரம், கட்சிக்குள் பெரிதான போது, “கட்சியால் வழங்கப்பட்ட தகவலை சரியாக விளங்கிக் கொள்ள முடியாமல் போய்விட்டது“ என ஒரு உருட்டு, உருட்டி, நிலைமையை சமாளித்து விட்டார்கள்.
தமது மாநகரசபை உறுப்பினர்களின் ஆனோல்ட் விசுவாசத்தை நன்கறிந்த இரண்டு கட்சிகளும், ஆனோல்ட்டின் வரவு செலவு திட்டத்தில் கவனமெடுத்தன. இரண்டு கட்சிகளும் தமது உறுப்பினர்களை அழைத்து, யாழ் மாநகரசபை பக்கமே போக வேண்டாம் என அறிவுறுத்தின.
ஆனாலும், வரவு செலவு திட்டத்திற்கு இருவர் சென்றனர். ரெலோவின் தனேந்திரனும், புளொட்டின் நித்தியானந்தனும் சென்றிருந்தனர். தனேந்திரன் வரவு செலவு திட்டத்தை ஆதரித்து வாக்களித்தார். நித்தியானந்தன் எதிர்த்து வாக்களித்தார். அனேகமாக அவரும் ஆதரித்து வாக்களிக்கத்தான் சென்று, வரவு செலவு திட்டம் தோல்வியடைவது உறுதியானதால் எதிர்த்து வாக்களித்திருக்கக்கூடும்.
வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன், தமிழ் அரசு கட்சி தனித்தனியாக பேசியது. ஆனோல்ட் அனைத்து உறுப்பினர்களுடனும் பேசினார்.
தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தொலைபேசியில் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதனை தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். ஆனால், அவர்கள் நாசூக்காக மறுத்து, இப்போது இரு தரப்பும் வேறுவேறு தரப்பு என்பதை மாவைக்கு புரிய வைத்தனர்.
மாவை சேனாதிராசா அத்துடன் நிறுத்தவில்லை. புளொட் உறுப்பினர்களின் ஆதரவு கோரி பா.கஜதீபனுக்கும் தொலைபேசி அழைப்பேற்படுத்தினார். யாழ் மாநகரசபை உப தவிசாளர் ஈசனிற்கும் அழைப்பேற்படுத்தினார்.
அப்போது, ஆதரித்து வாக்களிக்கலாமென மாவையை சமாளித்துள்ளார் ஈசன். ஆனால் அவர் ஆதரித்து வாக்களிக்கவில்லை.
ஆனோல்ட்டும், இரண்டு கட்சிகளின் பிரமுகர்களுடனும் பேசினார். ஆனால் பலனிருக்கவில்லை.
வரவு செலவு திட்டம் தோல்வியடைந்த பின்னர், மீண்டும் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, தமிழ் அரசு கட்சி மற்றொரு விதமான அணுகுமுறையை கடைப்பிடித்தது. அதாவது, கட்சி உறுப்பினர்களுடன் பேசாமல், கட்சிகளின் தலைவர்களுடன் பேச ஆரம்பித்துள்ளது.
இதன்படி, முதல்வர் இ.ஆனோல்ட் அண்மையில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் நேரடியாக பேசி, ஆதரவு கோரியிருந்தார். அவர்கள் நாசூக்காக மறுத்து விட்டனர்.
ஆகவே, இந்த மாநகரசபையின் பதவிக்காலத்தில் ஆனோல்ட் முதல்வராகுவதென்பது கிட்டத்தட்ட நடக்காத விடயமாகி விட்டது.
இப்போது, தமிழ் அரசு கட்சியை ஆதரிக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலுக்கு பின்னர் ஆதரிக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
இதில் இன்னொரு விவகாரத்தையும் கவனிக்க வேண்டும். அடுத்த உள்ளூராட்சிமன்ற தேர்தல் முடிவும், கிட்டத்தட்ட தற்போதை நிலைமையை ஒத்ததாகவே இருக்கும். அப்படியொரு நிலைமை வந்தால், இலங்கை தமிழ் அரசு கட்சியினால் யாழ் மாநகரசபை ஆட்சியை பிடிப்பதை கற்பனையும் செய்ய முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சியை வெளியேற்றுவதற்கு சுமந்திரன் “தொழில்நுட்ப ரீதியிலான அணுகுமுறை“ என புதியதொரு உத்தியை கண்டறிந்து, காரணம் கற்பித்திருந்தார். இந்த வார்த்தையில் தவறுதலாக மயங்கி விட்டோம் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இப்பொழுதுதான் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். இந்த பட்டியலில் ஆனோல்ட்டின் பெயரும் முன்வரிசையில் இருக்கக் கூடும்.