அமெரிக்க வானில் பறந்தது ஏலியன்களின் பறக்கும் தட்டுகள். அவை அமெரிக்காவை உளவு பார்க்க வந்திருக்கின்றன எனப் பரவும் செய்திகள் குறித்து விளக்கமளித்துள்ளது அமெரிக்க வெள்ளை மாளிகை.
கடந்த பெப்ரவரி 3ஆம் திகதி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்காவின் மான்டனா மாகாண பகுதிக்கு மேலே மர்ம பலூன் ஒன்று பறந்தது உலகெங்கும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
பின்னர் விசாரணையில் இது சீனாவினுடையது எனக் கண்டுபிடித்து “சீனா, எங்கள் நாட்டை உளவு பார்க்க இந்த பலூனை அனுப்பியிருக்கிறது“ என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதை மறுத்த சீனா, “வானில் பறந்த பலூன் எங்களுடையதுதான். வானிலை ஆய்வுக்காகப் பறக்கவிடப்பட்ட பலூன், காற்றின் வேகம் மாறுபடுதல் காரணமாகத் திசைமாறி அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டது” விளக்கம் அளித்திருந்தனர்.
இந்த விவகாரத்தினால் இருநாடுகளிற்குமிடையில் இராஜதந்திர மோதல் ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின்படி கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி அந்த பறக்கும் பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதனால் அமெரிக்கா – சீனா இடையே பனிப்போர் நடக்க, இது உலகநாடுகள் மத்தியில் பேசுபொருளாகி பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தையடுத்து அமெரிக்காவில் இரண்டு, கனடாவில் ஒன்று என வானில் பறந்த மூன்று மர்மப் பொருள்களை (UFO – Unidentified Flying Objects) அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதில் பிரச்னை என்னவென்றால் முன்பு பறந்த பலூன் சீனாவினுடையது என்று கண்டறியப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு வானில் பறந்த இந்த மூன்று மர்மப் பொருள்கள் என்ன, அது யாருடையது என்பது பற்றி இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்காகச் சுட்டு வீழ்த்தப்பட்ட அதன் பாகங்களைத் தேடிச் சேகரித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது அமெரிக்க இராணுவம்.
இதற்கிடையில் இந்த விஷயங்களைத் திசை திருப்பும் வகையில் இதற்குக் காரணம் ஏலியன்களாக இருக்கலாம், பறக்கும் தட்டில் அவர்கள் பூமிக்கு வந்திருக்கலாம், அமெரிக்காவை உளவு பார்ப்பது அவைதான் என்ற வதந்திகள் மக்களிடையே வேகமாகப் பரவின.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர்,
“இது பற்றிய உரிய விளக்கத்தை வெள்ளை மாளிகையிலிருந்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த விவகாரம் பற்றிய நிறையக் கேள்விகளும் சந்தேகங்களும் இருக்கின்றன. ஆனால், இதில் ஏலியன்கள் அல்லது ஏலியன்களின் செயல்பாடுகள் தொடர்பான எந்தவொரு அறிகுறிகளும் இல்லை. இதை அமெரிக்க மக்களுக்கும் அனைவருக்கும் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். இந்த வதந்திகள் மக்களிடையே வேகமாகப் பரவி வருவதால் இதுகுறித்து தெளிவுபடுத்துவது அவசியமான ஒன்று” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “இருப்பினும், ஏலியன் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று கிண்டலடித்தபடி கூறிச்சென்றார்.