யாழ்ப்பாணம், அத்தியடி பகுதியில் பெண்ணொருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய பொலிசார் தீவிர தேடுதல் நடத்தி வருகிறார்கள்.
அத்தியடி பகுதியில் நேற்று முன்தினம் (12) மாலை பெண்ணொருவர் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார். சுப்ரமணியம் கலாநிதி (52) என்ற பெண்ணே அடித்துக் கொல்லப்பட்டார்.
நாவற்குழியை சேர்ந்த இந்த குடும்பம், சில வருடங்களின் முன்னரே, வீடு வாங்கி அத்தியடிக்கு குடிவந்துள்ளனர். கொல்லப்பட்ட பெண் நீண்டகாலமாக கணவரை பிரிந்து வாழ்கிறார்.
தலையில் பிக்கானால் அடித்ததில், அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.
கொல்லப்பட்ட பெண்ணும், 24 வயதான மகளுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
நாவற்குழியை சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். அவர் வீட்டு வேலைகளையும் செய்பவர்.
அவர் வரும்போது, வீட்டின் முன்பகுதியில் நடமாடாமல், வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென தாயார் கண்டிப்பாக கூறியுள்ளதால், அதன்படியே செயற்படுவதாக மகள் கூறியுள்ளார். நேற்று முன்தினமும், அந்த நபர் வந்த போது, அறைக்குள் இருந்து கொண்டதாக மகள் குறிப்பிட்டுள்ளார்.
“மாலை 3.30 மணியளவில் அம்மா பெரிதாக அலறும் சத்தம் கேட்டது. மாலை 6 மணியளவில் வீட்டுக்கு வேலைக்கு வந்தவர், மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு செல்லும் சத்தம் கேட்டது. 6.30 மணியாகியும் அம்மா வீட்டுக்குள் வரவில்லை. இதனால் அவரது தொலைபேசிக்கு அழைப்பேற்படுத்தினேன். வீட்டின் முன்பக்கத்தில் தொலைபேசி ஒலித்தது.
பின்கதவு வழியாக சென்று பார்த்தேன். அம்மா தலையில் இரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டார்“ என மகள் கூறியுள்ளார்.
வீட்டுக்குள்ளிருந்து முன்கதவு வழியாக வெளியில் வருபவர் சிக்கும் விதமாக, இரும்புக் கம்பியில் மின்சார இணைப்பு ஏற்படுத்தி விட்டே அந்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.
அந்த வீட்டு சூழலில் சூனியம், செய்வினை செய்யும் பல பொருட்கள் காணப்பட்டன.
வீட்டுக்குள் 30 இலட்சம் ரூபா பணமும் காணப்பட்டது. நாவற்குழியில் காணி விற்பனை செய்த பணம் அதுவென்பது தெரிய வந்தது. அந்த பணத்தை மகளின் வங்கிக் கணக்கில் பொலிசார் வைப்பிலிட்டனர்.
தச்சன்தோப்பிலுள்ள சந்தேகநபரின் வீட்டுக்கு பொலிசார் சென்ற போது, அவரது மோட்டார் சைக்கிள் மட்டுமே காணப்பட்டது. அவர் வீட்டிலிருக்கவில்லை.
பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.




