வாழைச்சேனை கருவன்கேணியில் உள்ள மயானத்தில் போரின் போது விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடி அகழ்வில் ஈடுபட்ட கார் விற்பனையாளர் உட்பட மூவரை வாழைச்சேனை முகாம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
இந்த கார் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் வாதுவ பிரதேசத்தை சேர்ந்தவர். சந்தேகநபர்களில் எஞ்சியவர்கள் களுத்துறை மற்றும் குருநாகல் எம்போகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
மயானத்தில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை கண்டுபிடிப்பதற்காக நிலத்தடி மெட்டல் டிடெக்டரை கொண்டு வந்தவர் களுத்துறையை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த குழுவை இந்த இடத்திற்கு வரவழைத்தவர் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி என சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தியதில் தெரியவந்துள்ளது. குறித்த நபரை அடையாளம் காண விசாரணைகள் இடம்பெற்று வருவதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் காரில் வாழைச்சேனைக்கு வந்துள்ளனர். சந்தேகநபர்கள் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தங்கத்தை தேடும் வேளையில் கிராம மக்கள் தகவல் தந்ததாக அதிரடிப்படையினர் தெரிவித்தனர். இவர்கள் சனிக்கிழமை வாழைச்சேனைக்கு வந்து விடுதியில் தங்கியிருந்தனர்.
சந்தேகநபர்கள் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.