அண்மையில் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அதீத வரி திருத்தத்திற்கு எதிராக பல தொழிற்சங்கங்கள் இன்று (8) பாரிய தொழிற்சங்க போராட்டத்தை அறிவித்துள்ளன.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளால் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் திணறி வரும் மக்களுக்கு அண்மைய வரி உயர்வு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக, தொழிற்சங்க போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நியாயமற்ற வரி அதிகரிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
இலங்கை துறைமுக அதிகாரசபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றுடன் இணைந்த பல தொழிற்சங்கங்களால் இன்று ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் காலை 8 மணிக்கு அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும்.
எவ்வாறாயினும், குழந்தைகள் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தடையின்றி தொடரும்.
இதேவேளை, அரச சித்த மருத்துவ அதிகாரிகளும் இன்று ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. சித்த மருத்துவமனைகளில் உள்நோயாளர் பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் சேவைகள் நடைபெறாது.



