மீன் வெட்டும் கருவியால் கழுத்தை அறுத்து 27 வயது இளைஞனைக் கொன்ற குற்றச்சாட்டில் 27 வயது இளைஞனின் இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்குப் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னதுவ ஹெவே, பலதொட்ட விஜயகம வீடமைப்புத் தொகுதியில் வசிக்கும் அனுருத்த தனஞ்சய டி சில்வா என்பவர் நேற்று (07) பிற்பகல் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டவரின் 14 வயதான தம்பியை நேற்று மாலை கைது செய்த போது, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு அடி நீள மீன்வெட்டும் கத்தியை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலையை செய்த சிறுவன் சில நாட்களுக்கு முன்பு கிராமத்தில் உள்ள சிறுமியிடம் தனது காதலை தெரிவித்ததாகவும், அந்த சம்பவமே கொலைக்கு வழிவகுத்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
காதலை சொன்ன விவகாரத்தை சிறுமி தனது தந்தையிடம் கூறியுள்ளார். சிறுமியின் தந்தை, சிறுவனின் தந்தையிடம் இது பற்றி முறையிட்டுள்ளார்.
இந்த விவகாரமே நேற்று சகோதரர்களிற்கடையில் வாய்த்தர்க்கமாக மாறியது. மூத்த சகோதரன், இளைய சகோதரனின் காதல் விவகாரத்தை கண்டித்ததுடன், சிறுவனை தாக்கியுமுள்ளார்.
தாயார் வீட்டில் இல்லாத சமயத்தில், வீட்டின் முன் அறையில் மூத்த சகோதரன் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.
சமையலறையில் இருந்த இரண்டடி நீள கத்தியை எடுத்துச் சென்று, உறங்கிக் கொண்டிருந்த சகோதரனின் கழுத்தை வெட்டியதை கைதான தம்பி தெரிவித்துள்ளார்.
தூங்கி் கொண்டிருந்த அண்ணனின் கழுத்தில் வெட்டிவிட்டு, வீட்டின் பின்பக்கம் ஓடினார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ரத்தக்கறை படிந்த கத்தி வீட்டின் பின்புறம் வீசப்பட்ட நிலையில் இருப்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
களுத்துறை குற்றப் புலனாய்வு பிரிவினர், களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் உத்தியோகபூர்வ நாய்களைப் பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
சந்தேக நபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்