முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேசசபைக்காக இலங்கை தமிழ் அரசு கட்சி தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தெடர்பில் இன்று (8) பிற்பகல் 2 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தெரிவத்தாட்சி அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கரைத்துறைப்பற்று பிரதேசசபைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக இலங்கை தமிழ் அரசு கட்சி ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு நேற்று உயர்நீதிமன்ற நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர, அர்ஜூன் ஒபேசேக ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தெரிவித்தாட்சி அதிகாரியின் முடிவு சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரியிருந்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்வதென இலங்கை தமிழ் அரசு கட்சி தீர்மானித்த பின்னர், இடம்பெற்ற இந்த வேட்புமனு நிராகரிப்பை தொடர்ந்து, கட்சியின் முல்லைத்தீவு கிளையிலுள்ள இரண்டு அணிகள் ஒருவரையொருவர் மோசமான வார்த்தைகளில் சமூகஊடகங்களில் வசைபாடியமை குறிப்பிடத்தக்கது.