அரசாங்கத்தின் புதிய வருமான வரி முறைக்கு எதிராக அரசாங்க மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் கூட்டு தொழில் வல்லுநர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டை பகுதியில் இன்று (8) நண்பகல் கடும் பதற்றமான சூழல் நிலவியது.
அங்கு சுமார் ஒரு மணி நேரம் மறியலில் ஈடுபட்டவர்கள் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டதையடுத்து, புகையிரத நிலையத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளையும் பொலிசார் மூடியதோடு, வீதியின் இருபுறமும் பாதுகாப்பு வளையத்தை அமைத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேறுமாறு அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்புடன் ‘ஹூ’ என்று கூச்சலிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதிகரித்து வரும் போராட்டக்காரர்களின் எண்ணிக்கையையடுத்து இராணுவம் அழைக்கப்பட்டது. இராணுவம் இரண்டாவது பாதுகாப்பு வளையமாக போராட்டத்தை சுற்றி நின்றது.
நாட்டின் பிரதான மற்றும் பெரிய தொழிற்சங்கங்களான துறைமுக அதிகாரசபை, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகிய மூன்று நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் உட்பட கிட்டத்தட்ட 100 தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன .