ரூ.200 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இடம்பெறும் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக மருதானையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை வீசியுள்ளனர்.
அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது தடியடியும் நடத்தப்பட்டது.
மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு முன்பாக ‘சுதந்திரம் எங்கே?’ என்ற தொனிப்பொருளில் நேற்று (3) பிற்பகல் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது, இரவு 9.00 மணியளவில், பொலிசார் மக்கள் மீது கண்ணீர், நீர் தாரை பிரயோகம் மற்றும் தடியடி நடத்தி அந்த இடத்தை விட்டு விரட்டினர்.
அதன்பிறகு, காவல்துறையினரும் கலவர தடுப்பு பிரிவினரும் துரத்திச் சென்று தடியடி நடத்தி, அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தியதையடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறி வேறு இடத்தில் திரண்டனர்.
தாக்குதலுக்கு முன்னர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு வந்து நீதிமன்ற உத்தரவைக் காட்டி அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்திய போதிலும், சத்தியாக்கிரகத்தை அமைதியான முறையில் நடத்த நீதிமன்றதடை உத்தரவு இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
போலீசார் அங்கிருந்து சென்றதும் மற்றொரு குழு வந்து சத்தியாக்கிரகத்தை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அந்த கும்பல் அங்கிருந்து வெளியேறிய பின்னர், பொலிஸார் பாரிய நீர்த்தாக்குதலை நடத்தியதாகவும், பின்னர் விரட்டிச் சென்று தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.