அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட தொழிற்சங்க செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்தை தடைசெய்து உத்தரவு பிறப்பிக்குமாறு குருதுவத்தை பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (03) நிராகரித்துள்ளார்.
75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்கும் அரச வைபவம் நாளை (04) காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளதால் குற்றவியல் நடைமுறைச் சட்டம்106 (01) பிரிவின் பிரகாரம் இந்தப் போராட்டக்காரர்கள் நடத்தும் போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என பொலிஸ் பொறுப்பதிகாரி கோரிக்கை விடுத்தார்.
அரசியலமைப்பின் 14 ஆவது சரத்து, பொது மக்கள் ஒன்றுகூடுவதற்கும், கருத்துக்களை வெளியிடுவதற்கும், அவர்கள் விரும்பும் இடத்தில் வாழ்வதற்கும் சுதந்திரத்தை வழங்குவதாகக் கூறிய நீதிபதி, போராட்டக்காரர்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டால் குற்றவியல் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் அதிகாரங்களின்படி செயல்படுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் குருதுவத்தை பொலிஸார் பிரதிவாதிகளாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, குணரத்ன தேரர், பொக்குனுவிட பியசோம, ரத்கராவே ஜினரதன தேரர், அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையின் செயற்குழு அழைப்பாளர் அஞ்சன ரொட்ரிகோ, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் பெனடிக் ஜோசப் ஸ்டாலின் பெர்னாண்டோ, மாற்றம் இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு சதுரங்க வீரசேகர உள்ளிட்ட 30 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளனர்.