கணவரை பிரிந்து காதலனுடன் வாழ்வதற்காக, தான் இறந்துவிட்டதாக காட்டிக்கொள்வதற்காக, தன்னைப் போன்ற முகத்தோற்றம் கொண்ட யுவதியை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் இளம் பெண்ணும், காதலரும் ஜேர்மனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜேர்மன் – ஈராக்கியரான 23 வயதுடைய ஷரபன் கே என்ற யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார். ஓகஸ்ட் 2022 இல் நடந்த இந்தக் கொலை, ஷேகிர் கே என்ற 23 வயதான கொசோவா இளைஞனின் உதவியுடன் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருவரும் காதலர்கள்.
ஷரபனிற்கு திருமணமாகி விட்டது. ஆனால் பின்னர், ஷேகிர் கே என்ற இளைஞனை கண்டு காதல் வசப்பட்டார். இருவரும் ஒன்றாக வாழ்வதற்காக, கணவர் மற்றும் குடும்பத்தினரை ஏமாற்ற மரண நாடகம் ஆடி தலைமறைவாக முடிவு செய்தார்.
தன்னைப் போன்ற தோற்றமுடைய யுவதியை கொன்று, இறந்து விட்டதாக மற்றவர்களை நம்ப வைக்க விரும்பினார். இதற்காக இன்ஸ்டகிராமில் தன்னைப் போன்ற தோற்றமுடைய யுவதிகளை அவர் தேடி வந்துள்ளார்.
23 வயதான அல்ஜீரிய பின்னணியுடைய கதிட்ஜா ஓ என்ற அழகு பதிவரே கொலை செய்யப்பட்டார்.
கதிட்ஜா ஓ குத்திக் கொல்லப்பட்டுள்ளார். அவரது உடலில் 50 க்கும் மேற்பட்ட கத்திக் குத்து காயங்கள் உள்ளன. அவரது முகம் சிதைக்கப்பட்டுள்ளது.
கதிட்ஜாவை கொன்ற பிறகு, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் உடலைத் தங்கள் காரின் பின்சீட்டில் வைத்து, இங்கோல்ஸ்டாட் நகருக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு ஷரபனின் பெற்றோரால் இலகுவாக கண்டுபிடிக்கப்படும் விதமாக காரை நிறுத்தி விட்டு, தலைமறைவாகியுள்ளனர்.
ஷரபனின் குடும்பத்தினர் காரை கண்டுபிடித்து, அதற்குள்ளிருந்த சடலத்தை கண்டு அதிர்ந்தனர்.
அந்த உடல் தமது மகள் ஷரபன் தான் என குடும்பத்தினர் முதலில் அடையாளம் காட்டினர். ஆனால் பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கை கேள்விகளை எழுப்பியது.
இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அது ஷரபனின் சடலம் அல்லவென்பது தெரிய வந்தது. பின்னர் வழக்குரைஞர்கள் சடலம் கதிட்ஜாவுடையது என அடையாளம் கண்டனர்.
கொலைக்கு முந்தைய வாரத்தில் ஷரபன் சமூக ஊடகங்களில் பல்வேறு மாற்றுப்பெயர்களில் தன்னைப் போன்ற தோற்றமுள்ள பெண்களை தொடர்பு கொள்ள முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.
தம்மிடம் ஏராளமாக அழகு சாதனப் பொருட்கள் இருப்பதாக ஷரபன் கூறியதை கதிட்ஜா நம்பி விட்டார். அழகுக்கலை நிபுணராகவும், அழகுக்கலை பற்றி சமூக ஊடக பதிவருமான கதிட்ஜா, அழகு சாதன பொருட்களை பார்ப்பதற்காக ஷரபனை சந்திக்க ஒப்புக்கொண்டார்.
கடந்த ஓகஸ்டில் இந்த கொலை நடந்தது.
சம்பவ தினத்தன்று, ஷரபன் தனது முன்னாள் கணவரை முனிச்சில் பார்க்கப் போவதாக பெற்றோரிடம் கூறினார்.
ஆனால், அங்கு செல்லாமல் காதலன் ஷேகிர் கே உடன் கதிட்ஜாவின் குடியிருப்பிற்கு சென்று, அவரை காரில் ஏற்றிச் சென்றனர். வீட்டுக்கு செல்வதாக கூறி அழைத்து வந்து ஹெல்ப்ரோன் மற்றும் இங்கோல்ஸ்டாட் இடையே உள்ள வனப்பகுதியில் கொன்றதாக நம்பப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார், கொசோவோ இளைஞனான காதலனின் வீட்டில் வைத்து இருவரையும் கைது செய்தனர்.
ஷேகிரை சந்தித்த பின்னர், ஷரபனிற்கு கணவனுடன் பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரிவை ஷரபனின் குடும்பத்தினரும் விரும்பவில்லை. அனைவரையும் சமாளித்து, காதலனுடன் வாழ்வதற்காக இந்த கொலை நாடகத்தை ஷரபன் ஆடியுள்ளார்.
ஷேகிர் மற்றும் ஷரபன் ஆகியோருக்கு எதிராக 2023 ஜனவரியில் கைது வாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவரும் ஆயுள் தண்டனையை எதிர்கொள்கின்றனர்.
இரண்டு பெண்களும் நீண்ட கறுப்பு முடி, ஒத்த நிறங்கள் மற்றும் கனமான மேக்கப்புடன் ஒரே மாதிரியாக இருந்ததால், இந்த வழக்கு ஜெர்மன் பத்திரிகைகளால் “டோப்பல்கேங்கர் கொலை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.