பிரிட்டனில் ஒரு தலைமுறையில் நடக்கும் மிகப்பெரிய ஒருங்கிணைந்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று இடம்பெறுகிறது.
இதனால், சுமார் அரை மில்லியன் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ரயில் ஓட்டுனர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று புதன்கிழமை தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறினர்.
வேலைநிறுத்தத்தின் விளைவாக பிரிட்டன் முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டன, பிராந்தியத்தில் பெரும்பாலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
பிரிட்டனில் பல ஆண்டாகச் சம்பளக் குறைப்பை எதிர்நோக்கிய ஆசிரியர்களும் மற்ற அரசு ஊழியர்களும் தங்களின் வாழ்க்கைத்தரம் குறைந்து கொண்டே போவதாகக் குற்ற்சாட்டுகின்றனர்.
தேசிய கல்வி சங்கத்தின் பொதுச்செயலாளர் மேரி பூஸ்டட், தனது தொழிற்சங்கத்தில் உள்ள ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார். ஏனெனில் ஊதியம் குறைவதால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தொழிலை விட்டு வெளியேறுகிறார்கள், மீதமுள்ளவர்களுக்கு நிலைமையை சமாளிக்க கடினமாக உள்ளது.
தெற்கு லண்டனில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே அவர் கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளில் அவர்களின் ஊதியத்தில் பேரழிவுகரமான வெட்டு ஏற்பட்டுள்ளது.
மந்தநிலைக்கு செல்லும் ஒரே பெரிய பொருளாதாரம் பிரிட்டன் மட்டுமே என்று சர்வதேச நாணய நிதியம் ஜனவரி 30 அன்று கூறியது. IMF அறிக்கைப்படி வளர்ச்சி கணிப்பு பிரிட்டன் (-0.5 சதவீதம்) ஜெர்மனி (0 சதவீதம்), இத்தாலி (0.1 சதவீதம்) சதவீதம்), பிரான்ஸ் (0.9 சதவீதம்), அமெரிக்கா (1.0 சதவீதம்), கனடா (1.2 சதவீதம்) மற்றும் உலகம் முழுவதும் (3.2 சதவீதம்).
நான்கு தசாப்தங்களில் இல்லாத வகையில் பிரிட்டனில் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. பிரிட்டன் சமீபத்திய மாதங்களில் சுகாதார மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள், அமேசான் களஞ்சிய ஊழியர்கள் மற்றும் ரோயல் மெயில் தபால் ஊழியர்கள் உட்பட பல்வேறு துறைகளில் வேலைநிறுத்தங்கள் இடம்பெற்றுள்ளன.