பருத்தித்துறை, திக்கம் பகுதியில் வீடு புகுந்து பெருமளவு நகை, பணம் திருடப்பட்டுள்ளது.
திருடப்பட்ட நகைகளை நிதி நிறுவனமொன்றில் அடகு வைக்க வைக்க இ.போ.ச சாரதியொருவர் நேற்று மாலை நெல்லியடி நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திக்கத்திலுள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் அதிகாலை திருட்டு நடைபெற்றது. அந்த வீட்டு உரிமையாளரான குடும்பப்பெண்ணின் சகோதரனிற்கு சில நாட்களின் முன் திருமணம் நடந்தது. இதற்காக வெளிநாட்டிலிருந்து குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர்.
அந்த வீட்டிற்கு எதிரில் கட்டப்பட்ட புது வீட்டில் புதுமண தம்பதியும், தாயாரும் நேற்று முன்தினம் இரவு தங்கியிருந்துள்ளனர். திருட்டு சம்பவம் நடந்த வீட்டில் மகளும், கணவரும் தங்கியிருந்துள்ளனர்.
வீட்டின் முன் பகுதியில் உறக்கத்திலிருந்த கணவர், அதிகாலை வேளையில் உறக்கம் கலைந்து திடீரென எழுந்த போது, வீட்டின் முன்பகுதியில் ஒருவர் நிற்பதை அவதானித்தார்.
அவர் யார் என கேட்க, வீட்டு உரிமையாளர் மீது மர்மநபர் தாக்குதல் நடத்தியுள்ளார். இருவரும் மல்லுக்கட்ட ஆரம்பிக்க வீட்டு அறைக்குள்ளிருந்து மேலும் ஒருவர் வெளியே ஓடி வந்தார். திருடர்கள் அனைவரும் மதிலேறி தப்பியோடி விட்டனர்.
சுமார் 18 பவுண் நகை, ரூ.5 இலட்சத்திற்கும் அதிகமான பணம், கையடக்க தொலைபேசிகள், வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட இனிப்பு வகைகள் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
திருடப்பட்ட பொருட்களை வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து வைத்து விட்டு, மற்றொரு அறைக்குள் இருந்த அலுமாரியை உடைக்க முற்பட்ட போது, எழுந்த சத்தத்தினாலேயே வீட்டு உரிமையாளர் விழித்துக் கொண்டுள்ளார்.
வீட்டுக்குள் வித்தியாசமான திராவகம் தெளிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்தவர்களை மயக்கமடைய வைக்க ஏதேனும் மருந்து தெளிக்கப்பட்டதா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசாரிடம் முறையிட்டதையடுத்து, அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை நெல்லியடி நகரிலுள்ள நிதி நிறுவனமொன்றிற்கு வந்த ஒருவர் 6 பவுண் நகைகளை அடகு வைக்க முயன்றார். நகை திருட்டு சம்பவத்தை அறிந்திருந்த நிதி நிறுவத்தினர் உடனடியாக நெல்லியடி, பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நெல்லிபடி, பருத்தித்துறை பொலிசார் வந்து, அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவை திருட்டு நகைகள் என்பது தெரிய வந்தது.
நகை திருடப்பட்ட குதியை சேர்ந்த 35 வயதான ஒருவரே திருட்டு நகைகளை அடகு வைக்க வந்திருந்தார். அவர் இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையில் சாரதியாக கடமையாற்றி வருபவர்.
திருட்டில் ஈடுபட்ட ஒருவர் தனது பங்கு நகைகளை, சாரதியிடம் விற்பனை செய்தாரா என்று பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.