யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற புதிய முதல்வர் தெரிவு எனது அதிகாரத்துக்கு உட்பட்ட விடயம் அல்ல என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் சனிக்கிழமை யாழ் மாநகர சபையின் புதிய முதல்வராக இமானுவேல் ஆனால் நியமிக்கப்பட்டதாக வெளிவந்த வர்த்தமானி தொடர் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 19ஆம் திகதி யாழ். மாநகர முதல்வர் தெரிவு இடம்பெற இருந்த நிலையில் சபையில் கோரம் இருந்ததாக ஒரு பகுதியினரும் கோரம் இல்லை என பிறிதொரு பகுதியினரும் கருத்துத் தெரிவித்தமை தொடர்பில் ஊடகங்களில் அவதானித்தேன்.
மாநகர சபையில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் அதிகாரம் எனக்கு வழங்கப்படவில்லை மாறாக உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரையும் உள்ளூராட்சி ஆணையாளரை நியமிக்கும் அதிகாரங்கள் என்னிடம் உள்ளது.
ஆகவே இலங்கை அரசியல் அமைப்பு மற்றும் மாநகர கட்டளைச் சட்டங்களுக்கு உட்பட்டு முதல்வர் தெரிவை மேற்கொள்ளும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கே வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
எனினும், ஆளுனரின் அழுத்தத்தினாலேயே யாழ் மாநகர முதல்வராக இ.ஆனோல்ட் நியமிக்கப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. முதல்வர் தெரிவிற்கு கோரம் இல்லையென அறிவித்துவிட்டு சென்ற உள்ளூராட்சி ஆணையாளர், அரசியல் அழுத்தங்கள் இல்லாமல், தனது முடிவை மாற்ற வாய்ப்பிருக்கும் சாத்தியங்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.



