தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறுமாறு கோரியும், கொலைமிரட்டல் விடுத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸ் மா அதிபர் நேற்று (19) குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஐஜி) கே.பி.பி. பத்திரன மற்றும் செனவிரத்ன பண்டார திவரத்ன ஆகியோருக்கே இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
கடந்த 18ஆம் திகதி இந்த இரு உறுப்பினர்களுக்கும் தொலைபேசி ஊடாக இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி கே.பி.பி.பத்திரனவிற்கு, ‘அறகலய’வின் ஆயுதமேந்திய தலைவர் என்று கூறிய நபர் ஒருவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து விலகுமாறு மிரட்டியுள்ளார்.
அத்துடன், தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுமாறும் குறித்த நபர் தன்னிடம் கேட்டுள்ளதாகவும் பத்திரன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
செனவிரத்ன பண்டார திவரத்ன கடவத்தை தலுப்பிட்டியவில் வசிக்கிறார். அவருக்கு வாட்ஸ்அப் மூலம் அலைபேசியில் அழைப்பு விடுத்த இனந்தெரியாத நபர் ஒருவர், தான் ‘அறகலய’வின் ஆயுதமேந்திய தலைவர் என்றும், தேர்தல் ஆணையத்தை விட்டு வெளியேறுமாறும் மிரட்டல் விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
உள்ளூர் இலக்கம் ஒன்றின் ஊடாக தனக்கு இந்த தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், எஸ்.பி.திவரத்னவுக்கு வட்ஸ்அப் மூலம் வந்த அழைப்பும் அதே இலக்கத்தின் ஊடாகவே வந்ததாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பத்திரன மேலும் தெரிவித்தார்.