இலங்கை முன்னேற வேண்டுமெனில் பொருளாதார வளர்ச்சி அவசியமானது. அதற்கு, இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, தமிழ் மக்களும் சமஉரிமை பெறுவது அவசியம். தற்போதைய சூழலில் 13வது திருத்தமே சாத்தியமானது.ஏனைய விடயங்களை அடுத்த கட்டமாக பார்த்துக் கொள்ளலாம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ் தரப்புக்களிடம் தெரிவித்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (20) தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், தமிழ் காங்கிரசின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரை ஒன்றாக சந்தித்தார்.
க.வி.விக்னேஸ்வரன் தேர்தல் பணி காரணமாக சந்திப்பிற்கு செல்லவில்லை.
இதன்போது கருத்து தெரிவித்த எஸ்.ஜெய்சங்கர்-
இலங்கை மிக மோசமான நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. இதிலிருந்து துரிதமாக மீண்டெழவில்லையென்றால், மிகப்பெரிய நெருக்கடியை மக்கள் சந்திப்பார்கள். இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, இலங்கை முன்னேற வேண்டுமெனில் பொருளாதார வளர்ச்சி மட்டும்தான் ஒரே தீர்வு. அதற்கு, இலங்கை உள்ளக- இனப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
தற்போது சிங்கள மக்களும் இனப்பிரச்சினை தீர்விற்கான சாதகமான அப்பிராயத்திற்கு வருகிறார்கள். இலங்கை இனப்பிரச்சினையை தீர்த்து, இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும்.
இந்தியாவின் நிலைப்பாடு எப்பொழுதும் ஒன்றுதான். 13வது திருத்தம் இப்பொழுது மேசையில் உள்ளது. அதை நீங்கள் நடைமுறைப்படுத்துவது இலகுவானது. 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்துவதுதான் இந்தியாவின் ஒரே நிலைப்பாடு என்றார்.
முன்னதாக, கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தத்தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்த போது, ஒற்றையாட்சியை ஏற்க முடியாது, சமஷ்டி முறையிலான அதிகார பரவலாக்கம் அவசியம் என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக எஸ்.ஜெய்சங்கர் பதிலளித்தார்- 13வது திருத்தத்தைஐய நடைமுறைப்படுத்தாத அரசு, நீங்கள் கேட்பதையெல்லாம் நடைமுறைப்படுத்தும் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள். முதலில் சாத்தியமானவை அடையுங்கள். 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டை இந்தியா தற்போது எடுத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முதலாவது இலக்கை அடையுங்கள்.
அடுத்த கட்டமாக, நீங்கள் கோரும் தீர்வுக்கான வாய்ப்புக்கள் உருவாகினால், அப்போது அவற்றை அடையுங்கள் என்றார்.
தமிழ் கட்சிகள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து நிற்கும் சூழலில், அவை அனைத்தையும் ஒன்றாக கூட்டத்திற்கு அழைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர், இந்த பிரிவை தாம் இரசிக்கவில்லையென்ற செய்தியையும் வழங்கியுள்ளார்.