வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்தும் விதிகளை உள்ளடக்கிய தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம் 61 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 97 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இரண்டாவது வாசிப்பு விவாதத்துக்கான சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.
இந்த சட்டமூலம் மீதான விவாதம் நேற்று பகல் முழுவதும் நடைபெற்றது. விவாதத்தின் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட எம்பிக்கள் பேசினர்.
இந்தச் சட்டமூலம் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டாலும் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தாது என்ற சரத்தை உள்ளடக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்த போதிலும் அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை.