இந்தியாவின் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகள் உண்ணாவிரத போராட்டமிருந்தவர் இரோம் ஷர்மிளா. அவரை இரும்பு பெண் என அந்த மாநில மக்கள் அழைத்து, கொண்டாடி வந்தனர்.
அவர் 2016ஆம் ஆண்டு தனது போராட்ட வழிமுறையை மாற்றினார். தேர்தலில் போட்டியிட்டார். வெறும் 90 வாக்குகளையே பெற்று மோசமான தோல்வியடைந்தார். 16 ஆண்டுகளாக தமக்காக உண்ணாவிரதமிருந்தவர் என மக்கள் சிந்திக்கவில்லை.
ஒருவகையில் பார்த்தால், அந்த மக்கள் இரோம் ஷர்மிளா இறப்பதை கூட ஏற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால், அவர் வாழ எடுத்த முடிவை அங்கீகரிக்கவில்லை. இது எவ்வளவு கொடுமையானது.
இது மணிப்பூரிற்கு மட்டும் பொருத்தமானதல்ல. மணிப்பூர் மக்களை போல, போராட்டமே வாழ்க்கையாகிப் போன ஈழத்தமிழர்களிற்கும் பொருத்தம்.
சிலர் கூறுவதுண்டு- பிரபாகரன் தேர்தலில் போட்டியிட்டாலும் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என.
விடுதலைப் புலிகளை கொண்டாடிய மக்கள், விடுதலைப் புலிகளின் நாமத்தை சொல்லி இப்போதும் புளகாங்கிதமடையும் மக்கள்- அந்த விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த யாரையும் தேர்தலில் வெற்றியடைய வைக்கவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த பலர் கடந்த சில தேர்தல்களில் போட்டியிட்டனர். ஆனால் யாரும் வெற்றிபெறவில்லை.
இதை, இன்னொரு வகையில் பார்த்தால், விடுதலைப் புலிகள் போராடி மடிவதைத்தான் மக்கள் ரசித்தார்கள். அந்த அமைப்பிலிருந்தவர்கள், வாழ்வதற்கு எடுத்த முடிவை அங்கீகரிக்கவில்லை.
புலிகளை மட்டுமல்ல, புலிகளின் சித்தாந்தத்தை ஆதரித்த, அந்த சித்தாந்தத்திற்கு ஆதரவாக வெளிப்படையான ஆதரவாளர்களாக செயற்பட்டவர்களையும் மக்கள் வெற்றியடைய வைக்கவில்லை. வெற்றியடைந்த தமிழ் தேசிய அரசியல்வாதிகள் பலரும் தம்மை புலிகளின் ஆதரவாளர்களாக காட்டிக் கொள்கிறார்கள்தான். ஆனால், அந்த சித்தாந்தத்திற்கு செயற்பாட்டு ரீதியான ஆதரவாளர்களை தமிழ் சமூகம் வெற்றிபெற வைக்கவில்லையென்பது குரூரமானது. நமது சமூகத்தின் போலித்தனமான அணுகுமுறையையும் புலப்படுத்துவது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பிலும், தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பிலும் சில தேர்தல்களை எதிர்கொண்ட க.அருந்தவபாலன் அவற்றில் வெற்றியடையவில்லை. அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்ல. அந்த அமைப்பின் தீவிர செயற்பாட்டு ஆதரவாளருமல்ல.
என்றாலும், நமது சமூகத்தின் மிகப்பெரும்பாலானவர்களை விட, அந்த சித்தாந்தத்திற்கு நெருக்கமான வாழ்ந்தவர். அதற்கான விலைகளையும் கொடுத்தவர்.
அவரும் இப்பொழுது தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தோன்றிய அணிவாதத்தால் அவர் பாதிக்கப்பட்டு, தேர்தல்களில் வெற்றியடைய முடியாமல் போனது. பின்னர், தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்தார். விக்னேஸ்வரனின் அந்த கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது. கட்சி தொடங்கிய போது இருந்த பெரும்பாலானவர்கள் இப்போதில்லை. விரக்தியுடன் ஒதுங்கிச் சென்று விட்டனர். விக்னேஸ்வரனிடமிருந்த தலைமைத்துவ பண்பு குறைகள் கட்சியையும் வீழ்ச்சியடைய வைத்ததுடன், அவரை நம்பிச் சென்றவர்களையும் நடுத்தெருவில் விட்டது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அருந்தவபாலன்.
தேர்தல் அரசியலே வேண்டாம், எந்த கட்சியும் வேண்டாம் என அவர் இப்போது ஒதுங்கிச் சென்றுவிட்டார். தேர்தலில் செலவிட்ட பணத்தை வைத்திருந்தால் வசதியான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம் என்றும் அவர் வேதனையாக குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த விரக்தி உண்மையில் வேதனையானது. தமிழ் தேசிய அரசியலில் உண்மையான செயற்பாட்டு ஆதரவாளராக இருந்த ஒருவர், இப்படியான வேதனை கட்டத்தை அடைவது நமது சமூகத்தின் பார்வைகள் குறித்த பல கேள்விகளை எழுப்புகிறது. தேர்தலிற்காக விடுதலைப் புலிகளின் பெயர்களை சொல்பவர்களையும், துதிபாடுபவர்களையும் கொண்டாடும் சமூகம், உண்மையான செயற்பாட்டாளர்களை கண்டறிய முடியாமல் இருப்பது, நமது சமூகத்தின் பலவீனத்தை புலப்படுத்துவதாகவே அமைகிறது.
உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், பல தரப்புக்களும் அவரை அணுகியுள்ளன. யாருடைய கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை.
இரண்டு நாட்களின் முன்னர் வி.மணிவண்ணன் நேரில் சென்று, கட்சிக்கு திரும்பி வரும்படியும், சாவகச்சேரி நகரசபையை கைப்பற்ற களத்தில் இறங்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியில் முன்னர் அங்கம் வகித்திருந்த போதும், தற்போது அவர்களிற்காக பணியாற்ற முடியாதென அருந்தவபாலன் தெளிவாக குறிப்பிட்டு விட்டார்.
விக்னேஸ்வரன் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் பலவீனமானவர். அண்மையில் கூட்டணி தொடர்பான பேச்சின் போதும், அவர் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்தினார். அவரை மற்றொரு தரப்பு தவறாக வழிநடத்தியிருக்கலாமென்ற விமர்சனம் எழுந்திருந்தது. மணிவண்ணன் தரப்பினரே இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிறு குழுவாக செயற்படும் அந்த தரப்பினர் யாழ் மாநகரசபையை கைப்பற்றி, தமது இருப்பை தக்கவைக்க, தமிழ் தரப்பின் ஒற்றுமை முயற்சியை குழப்பியதாக பரவலாக விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மணிவண்ணன் தரப்பின் கோரிக்கையையும் அருந்தவபாலன் நிராகரித்துள்ளார்.