நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 62 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது வருகின்றன.
Yeti விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள பொக்காரா விமான நிலையத்திற்குச் சென்றது.
அப்போது, விமானம் விபத்திற்குள்ளானது.
விமானம் காலை 10:50 மணிக்கு (05:05 GMT) Seti Gorge-ல் இருந்து விமான நிலையத்துடன் தொடர்பு கொண்டது என்று விமானப் போக்குவரத்து ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. “பின்னர் அது செயலிழந்தது.”
“விமானத்தின் பாதி மலைப்பகுதியில் உள்ளது,” என்று உள்ளூர்வாசி அருண் தாமு கூறினார், அவர் விமானம் கீழே விழுந்த சில நிமிடங்களுக்குப் பிறகு அந்த இடத்தை அடைந்ததாக ரொய்ட்டர்ஸிடம் கூறினார்.
“மற்ற பாதி சேதி நதியின் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது.”
விபத்து நடந்த இடத்தில் பெரும் கூட்டம் இருப்பதால், மீட்பு நடவடிக்கையில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அல் ஜசீராவிடம் தெரிவித்தனர். அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு மீட்புக் குழுவினர் வலியுறுத்தினர்.
இந்த விபத்தில், இதுவரை 62 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை உயிருடன் யாரும் மீட்கப்படவில்லை. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விமானம் தீப்பற்றியதால் அந்த இடம் முழுக்க புகை மண்டலமானது. விமானத்தில் பயணித்தவர்களின் உடல்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து பொக்காரா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
நேபாளத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பொக்காரா நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது. காத்மாண்டுவிற்கு மேற்கே 200கிமீ (124 மைல்) தொலைவில் உள்ள பொக்காரா ஒரு பரபரப்பான சுற்றுலா நகரமாகும்.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நேபாளத்தின் மிக மோசமான விபத்து இதுவாகும், டாக்காவில் இருந்து வந்த US-Bangla Dash 8 turboprop விமானம் காத்மாண்டுவில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 71 பேரில் 51 பேர் கொல்லப்பட்டனர் என்று விமானப் பாதுகாப்பு வலையமைப்பு தெரிவித்துள்ளது.
மே மாதம், தாரா ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், பொக்ராவிலிருந்து புறப்பட்ட 20 நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானது.
நேபாளத்தில் விமானம் அல்லது ஹெலிகொப்டர் விபத்துகளில் 2000 ஆம் ஆண்டு முதல் குறைந்தது 309 பேர் இறந்துள்ளனர்.