13 வது திருத்தச் சட்டத்தை நாங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம் என ஐனாதிபதி தெரிவித்தார் .
தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது வடக்கு மக்களுக்கான பிரச்சினை மாத்திரமல்ல இலங்கையில் உள்ள அனைவரும் கோருகின்றார்கள் இதை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என. அதற்காக அதை உடனடியாக முழுமையாக நடைமுறைபடுத்தி விட முடியாது. அதற்காக கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கு விரும்புகின்றேன். கட்டங்கட்டமாக அந்த 13 வது திருத்த சட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
தமிழ் மக்களிற்கு மட்டும் பிரச்சினைகள் இல்லை. நாட்டிலுள்ள எல்லா தரப்பினருக்கும் உள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி இப்போது பேசுகிறேன். விரைவில், முஸ்லிம் மலையக மக்களின் பிரச்சினைகளையும் பேசுவேன். சிங்கள மக்கள் மத்தியிலும் பிரச்சினைகள் உள்ளன. சிங்கள கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பாதுகாப்புணர்வு பற்றிய பிரச்சினை உள்ளது. அனைத்து பிரச்சினைகளையும் 2 வருடங்களிற்குள் தீர்க்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
அதேபோல காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை தொடர்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது என்பதன் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்பது எமது நிலைப்பாடாகும். அதற்கான குழுவொன்றை அமைக்கவுள்ளோம். இந்த குழுவை அமைப்பதில் ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா என பாதுகாப்பு தரப்பிடம் கேட்டேன். அவர்களும் உண்மையை கண்டறிய விரும்புகிறார்கள் என்றார்.