வலி வடக்குபிரதேசத்தில் 108 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் என ஜனாதிபதி தலைமையிலான கலந்துரையாடலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடந்த போது இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண, ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரட்ணாயக்க, யாழ் மாவட்ட இராணுவத்தளபதி உள்ளிட்ட தரப்பும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதன் போது, வலி வடக்கில் இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளில், பல்வேறு பகுதிகளிலும் உள்ள 108 ஏக்கர் காணிகளை உடனடியாக விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஏனைய காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என கூறப்பட்டது.
பலாலி வீதியின் கிழக்கில் உள்ள விவசாய நிலங்களை விடுவிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.
அந்த பகுதியில் இராணுவத்தின் சில முக்கிய தளங்கள் உள்ளதாக இராணுவத்தரப்பில் கூறப்பட்டது. அத்துடன், பலாலி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அந்த பகுதியில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்றும் கூறப்பட்டது.
எனினும், விவசாய தேவைக்காக அவற்றை விடும்படி தமிழ் மக்கள் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
அது பற்றி ஆராயுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டதுடன், அந்த விடயம் முடிக்கப்பட்டது.
நாகர்கோயில் பகுதியில் வனவள திணைக்களம் எல்லையிட்ட காணிகள் வர்த்தமானியிடப்பட்டதாகவும், அவற்றை விடுவிப்பதாக வர்த்தமானியிட 5 வருடங்களின் முன்னர் தீர்மானிக்கப்பட்ட போதும், இன்னும் நடைபெறவில்லையென சுட்டிக்காட்டப்பட்டது.
அது பற்றியும் ஆராய்ந்து நடவடிக்கையெடுக்கும்படி ஜனாதிபதி குறிப்பிட்டார்.