யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டம் நடைபெறுகிறது. போராட்டக்காரர்களை கலைக்க பொலிசார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
தற்போது அங்கு பாதுகாப்பு தரப்பினருக்கும் பொதுமக்களிற்குமிடையில் தள்ளுமுள்ளு நடந்து வருகிறது.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நல்லூர் சிவன் ஆலயத்தில் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள், பல்கலைகழக மாணவர்கள், மத தலைவர் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு, நல்லூர் பாரதியார் சிலையை அண்மித்த போது, பொலிசார் வீதித்தடைகளை இட்டு வழிமறித்தனர். பொலிசாரின் 4 வீதித்தடைகளை போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தியபடி முன்னேறினர்.
பாரதியார் சிலையடியில் பொலிசார், இராணுவம், விசேட அதிரடிப்படையினர் இணைந்து வீதித்தடைகள் இட்டு, பொதுமக்களை வழிமறித்தனர். அங்கு பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதன்போது மக்கள் மீது நீர்த்தாரை பிரயோகமும் நடத்தப்பட்டது.
எனினும், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு தரப்பினருக்கும், பொதுமக்களிற்குமிடையில் தள்ளுமுள்ளு நடந்து வருகிறது.