Pagetamil
முக்கியச் செய்திகள்

ஒரு வார்த்தையினால் ஏற்பட்ட திருப்பம்: புதிய கூட்டணியில் விக்னேஸ்வரனும் இணையலாம்!

ஒற்றுமையை விரும்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதை போல, தமிழ் கட்சிகள் ஓரணியில் திரளும் என எதிர்பார்த்திருந்த தருணத்தில், கூட்டணியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பதவி வேண்டும் என ஒற்றைக்காலில் நின்று, கூட்டணியை விட்டு வெளியேறிச் சென்றார் க.வி.விக்னேஸ்வரன்.

பின்னர், கொஞ்சமும் சங்கடமின்றி எனக்கு செயலாளர் பதவி தராததால் கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம், மான் சின்னத்தில் தனித்து போட்டியிடுகிறோம் என விக்னேஸ்வரன் பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினார். “கொள்கைக்குன்று“ மணிவண்ணனும் பக்கத்தில் விறைப்பாக உட்கார்ந்திருந்தார்.

எனினும், நேற்று பின்னிரவில் நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டது. இப்பொழுது புதிய கூட்டணியில் விக்னேஸ்வரன் இணைந்து கொள்ளும் சூழல் கனிந்துள்ளது.

அனேகமாக, புதிய கூட்டணி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் போது விக்னேஸ்வரனும் கலந்து கொண்டு கைச்சாத்திடும் நிலைமையே காணப்படுகிறது.

அதற்கு முன்னர், நேற்று பேச்சுவார்த்தையின் போது தன்னை பொம்மை போல பாவிக்க முற்பட்டதாக விக்னேஸ்வரன் கூறியிருந்தார். உண்மையில் அது தவறான கருத்து.

3 மணித்தியால பிடுங்குப்பாடு

நேற்று காலை 10 மணியளவில் கூட்டணி கலந்துரையாடல் ஆரம்பித்த போது, ஜனநாயக போராளிகள் கட்சி விவகாரம் ஆராயப்பட்டது. ஜனநாயக போராளிகள் கட்சியை ரெலோ, புளொட் என்பன தன்னிச்சையாக அழைத்து வருவதாகவும், தனக்கு தெரியாதென்றும் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். அது தவறான கருத்து.

ஜனநாயக போராளிகள் கட்சி, 6வது அணியாக புதிய கூட்டமைப்பில் இணைவதாக தமிழ்பக்கம் கடந்த 11ஆம் திகதி காலையில் செய்தி வெளியிட்டது. அந்த செய்தியை தமிழ்பக்கத்திடம் தெரிவித்தவரே, விக்னேஸ்வரன் கூட்டணியிலுள்ள ஒரு பிரமுகர்தான்.

ஜனநாயக போராளிகள் கட்சியுடன் விக்னேஸ்வரன் அணியின் தமிழ் தேசிய கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ரெலோ என்பன பேசியிருந்தன.

நேற்றைய கூட்டத்தின் முதல் 3 மணித்தியாலங்களும், ஜனநாயக போராளிகளை எடுப்பதா வேண்டாமா என்ற அர்த்தமற்ற சச்சரவே நீடித்தது. இந்த பேச்சிற்கு முன்னர், தனது வட்டத்திலுள்ளவர்களிற்கு, ஜனநாயக போராளிகள் இராணுவ உளவுத்துறையின் ஆட்கள் என ஒரு மின்னஞ்சலும் அனுப்பியிருந்தார்.

அது விக்னேஸ்வரனின் பொறுக்கித்தனம்.

விக்னேஸ்வரனின் குடும்பத்திலொருவர் வாசுதேவவின் குடும்பத்திலொருவரை திருமணம் செய்தார் என்பதற்காக, அவர் மஹிந்தவின் ஆள் என சுமந்திரன் ஆதரவாளர்கள் ஒரு காலத்தில் எப்படி குற்றம்சுமத்தினார்களோ, அதேபோல, முன்னாள் போராளிகள் என்றாலே அவர்கள் ஒன்றில் அவர்கள் இராணுவத்தின் ஆள் அல்லது புலிகள் அமைப்பில் இருந்து கலைக்கப்பட்டார் என அசால்ட்டாக கூறிவிட்டு கடந்து செல்வது. இந்த குற்றச்சாட்டை சொல்பவன் எல்லாம், இந்த விடுதலை போராட்டத்தில் ஒரு துரும்பையும் தூக்காதவனாகவே இருப்பான். தனது குற்றவுணர்வை மறைக்க, போராளிகளை குற்றம்சாட்டி தப்பிக்கும் உத்தியை கையாள்கிறான்.

நேற்றைய பேச்சின் போது, கிட்டத்தட்ட இரண்டு முறை விக்கி, மணி கூட்டத்திலிருந்து எழுந்து சென்று, தனி அறையில் உட்கார்ந்து பேசி விட்டு, வந்தார்கள். ஜனநாயக போராளிகள் மீதான குற்றச்சாட்டு என்னவென ஏனையவர்கள் கேட்ட போது, “அவர்களும் இதில் இருக்கிறார்கள். அவர்கள் எழுந்து அங்கால் பக்கம் சென்றால் சொல்கிறேன்“ என்றும் சொன்னார்.

இறுதியில் ஜனநாயக போராளிகளை வைத்திருக்க சம்மதித்தார்கள்.

பதவி வேண்டும்

இதன் பின்னர் சின்னம் தொடர்பான சர்ச்சையேற்பட்டது. முதலில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் சின்னம் தொடர்பாக த.சித்தார்த்தன் விளக்கமளித்தார். அந்த சின்னத்தை, புதிய கூட்டணிக்காக ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் ஜனநாயகமில்லாத தன்மை ஏற்பட்டமைக்கு, தமிழ் அரசு கட்சியின் சின்னத்தை பயன்படுத்தியதே காரணம். அந்த விளைவை விக்னேஸ்வரனும் எதிர்கொண்டவர்.

தமிழ் அரசியலில் போராட்ட இயக்கங்கள் ஆரம்பித்த பின்னர், புலிகள் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் ஏதோ ஒரு கட்டத்தில் அரசுடன் இணைந்து செயற்பட்டார்கள். எதிர்த்து செயற்பட்டார்கள். இதில் அணிகளும், கூட்டணிகளும் மாறிக் கொண்டிருந்தன. எனினும், அனைவரும் மக்களிற்காக புறப்பட்டவர்கள். எப்பொழுதும் இறக்க தயாராக இருந்தார்கள். கொள்கை விவகாரத்தில் உறுதியாக இருந்தார்கள்.

பதவிகளிற்காக கொள்கையை வடிமைத்த இயக்கம் என தமிழ் அரசியலில் எதுவும் இல்லை.

நேற்றைய பேச்சில் கலந்து கொண்ட பலருக்கு கிட்டத்தட்ட மாரடைப்பு ஏற்படாத குறை. விக்னேஸ்வரன் தனக்கு பதவி வேண்டும் என்றும், கூட்டணியை கட்டுப்படுத்துபவராக இருக்க வேண்டுமென்றும் அவ்வளவு வெளிப்படையாகவும், விடாப்பிடியாகவும் பேசினார்.

எந்த தனிக்கட்சி சின்னத்திலும் போட்டியிடாமல், கூட்டமைப்பிற்காக ஒதுக்கப்படும் சின்னத்தில் போட்டியிடலாம் என அனைத்து கட்சிகளும் தெரிவித்தனர். அனைவரும் கூறிய பின்னர், விக்னேஸ்வரன் கேட்டார்-

“ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளராக என்னை நியமிக்கலாமா?. தேவையென்றால் நீங்கள் யாராவது தலைவராக இருந்து கொள்ளுங்கள்“ என.

விக்னேஸ்வரன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதை போல, தலைமைப்பதவியை அவர் விட்டுக்கொடுக்கவுமில்லை. யாரும் அதைப்பற்றி பேசவுமில்லை.

அந்த கட்சியின் செயலாளராக விக்னேஸ்வரனை நியமிக்கலாம் என்றும், ஆனால் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் திகதி நெருங்கி விட்டதால், தற்போதைய கட்டமைப்பின்படி வேட்புமனுவை தாக்கல் செய்து விட்டு, அதற்கடுத்ததாக- விரைவாக செயலாளரை மாற்றலாம் என சித்தார்த்தன் தெரிவித்தார்.

“அப்படியென்றால் சரி வராது. எனது மான் சின்னத்தில் போட்டியிடலாமா“ என விக்னேஸ்வரன் கேட்டார்.

முடிவின்றி வாதங்கள் நீண்டுகொண்டு சென்ற போது, சுரேஸ் பிரேமச்சந்திரன் காட்டமாக தெரிவித்தார்.

“ஐயா.. நான் இதை சொல்ல உரிமையுடையவன். நாங்கள் ஒரு கூட்டணி அமைத்து, அதிலுள்ள அனைவரின் வாக்கின் மூலமே நீங்கள் வெற்றியடைந்தீர்கள். அதனால் எனக்கு இதை சொல்ல உரிமையுள்ளது.

ஒரு கூட்டணி அமைக்க வேண்டுமென்ற போது, நான் எவ்வளவு விட்டுக்கொடுப்பு செய்தேன். எமது கட்சியின் பெயரை மாற்றி, சின்னத்தை மாற்றி, அதற்காக வழங்கினேன். அந்த சின்னத்தில் போட்டியிட்டு, கூட்டணியிலுள்ள ஏனையவர்களின் ஒத்தாசையுடனும் வெற்றியடைந்து விட்டு, இப்பொழுது பொறுப்பின்றி நடக்கக்கூடாது. ஒரு கூட்டணிக்காக நான் எவ்வளவு விட்டுக்கொடுப்புடன் நடந்தேன். அதுபோல, கொஞ்சமாவது விட்டுக்கொடுப்புடன் நடந்தால் என்ன?“ என சுட்டிக்காட்டினார்.

இதைக்கேட்டதும் விக்னேஸ்வரனின் முகம் கறுத்து, மௌனமாகி விட்டார்.

என்றாலும், பதவி வேண்டுமென்ற நிலைப்பாடு மாறவில்லை.

அப்படியென்றால் நாங்கள் வெளியேறுகிறோம் என கூறிவிட்டு, விக்கி, மணி குழு சென்றது.

ஒரு வார்த்தையினால் திருப்பம்

நேற்றைய பேச்சின் பின்னர் இரு தரப்பும் செய்தியாளர் சந்திப்புக்களை நடத்தினார்கள். செயலாளர் பதவி கொடுக்காததால் வெளியேறினார் என கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. என்னை பொம்மையாக பாவிக்க முற்பட்டார்கள் என விக்கி சொன்னார்.

இந்த நிலைமை நேற்று இரவு மாறியது.

தற்போது, கூட்டணியில் இணைவதற்கு விக்னேஸ்வரன் விருப்பம் தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்தால், இன்று காலையில் அவரும் கலந்து கொண்டு புதிய கூட்டணி உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்.

புதிய நிலைமையின்படி, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் இணைத்தலைவர்களாகவும், விக்னேஸ்வரன் செயலாளராகவும், என்.சிறிகாந்தா இணைச் செயலாளராகவும் செயற்படுவார்கள்.

இந்த புதிய மாற்றம் ஏற்பட்ட பின்னணி சுவாரஸ்யமானது. வெறும் ஒரு வார்த்தையினால் அந்த மாற்றம் ஏற்பட்டது.

அந்த ஒரு வார்தை எது? அதை பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகிறோம்.

இதையும் படியுங்கள்

முன்னர் ஒன்றாக வந்தீர்கள்… இப்போது மூன்றாக வந்துள்ளீர்கள்; தமிழர்களுக்கிடையிலானதே மீனவர் பிரச்சினை: மோடி- தமிழ் கட்சிகள் சந்திப்பில் பேசப்பட்டவை!

Pagetamil

இலங்கை- இந்தியாவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Pagetamil

நரேந்திர மோடிக்கு பெரும் வரவேற்பு!

Pagetamil

‘என் மனைவியை தொட்டால்…’: ஜனாதிபதி அனுரவை எச்சரித்த மஹிந்தவின் சகா!

Pagetamil

Update: புதிய வாகன பதிவுகளுக்கு மட்டுமே வரி அடையாள எண் தேவை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!