புதையல் திருட்டு குழுவொன்றை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம், கஞ்சா போதைப்பொருளுடன் மொனராகலை பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார ஹேரத் சிக்கிக் கொண்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள், பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
புதையல் தோண்டும் குழுவினர் பற்றி கிடைத்த தகவலையடுத்து, சுமார் ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மொனராகலையை சேர்ந்த பிரபல கஞ்சா கடத்தல்காரர் ஒருவர் உள்ளிட்ட இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரைத் தவிர, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் சாரதியாக கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பிற்கு உதவிய சார்ஜன்ட் ஆகியோரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கைதான டைல் மல்லி என அழைக்கப்படும் கஞ்சா கடத்தல்காரன் மொனராகலை பிரதேசத்தில் பிரபல்யமானவர் என தெரிவிக்கப்படுகிறது. மற்றையவர் மொரட்டுவ எகொட உயன பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் புதையல் உள்ள இடங்களை கண்டறியும் விசேட திறமை கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் இந்த புதையல் தோண்டுபவர்களை துரத்திச் சென்றபோது, அவர்கள் மொனராகலை பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு ஜீப் வண்டியில் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜீப்பில் நிலத்தடி பொருட்களை கண்டறியும் ஸ்கானர் இயந்திரம் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சிறப்பு அதிரடிப்படை குழு இந்த ஜீப்பை துரத்தியது.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வந்த அதே ஜீப்பில் இந்தக் குழுவினர் பயணித்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜீப்பை
தனமல்வில பகுதியில் விசேட அதிரடிப்படையினர் சோதனையிட்டனர்.
அங்கு ஜீப் வண்டியின் சாரதி இருக்கைக்கு அருகில் இருந்தவர் மொனராகலை பொலிஸ் பிரிவின் எஸ்.எஸ்.பி. என அடையாளம் குறிப்பிட்டார். எஸ்எஸ்பியின் சாரதி வாகனத்தை செலுத்திச் சென்றார். அவரும் சிவில் உடையில் இருந்தார். ஜீப்பின் பின் இருக்கையில் மூன்று பேர் இருந்தனர்.
விசாரணை நோக்கத்திற்காக ஜீப்பை சோதனை செய்யவுள்ளதாக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் தெரிவித்திருந்தனர்.
அதிரடிப்படையினரின் சோதனையைத் தொடர்ந்து ஜீப்பில் ஸ்கானர் கிடைக்கவில்லை. பின் இருக்கையில் இருந்த மூன்று பொதுமக்களின் அடையாளத்தையும் அவர்கள் சோதனை செய்தனர். எஸ்டிஎஃப் அதிகாரிகள் அவர்களது மொபைல் போன்களை சோதனை செய்ததில் புதையல் தோண்டுவது தொடர்பான வீடியோக்கள் கிடைத்துள்ளன. பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததையடுத்து அதிரடிப்படையினர் ஜீப்பில் இருந்தவர்களை கைது செய்தனர்.
பின்னர் எஸ்.எஸ்.பி.யின் வீட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, கஞ்சா, அவர்கள் தேடிய ஸ்கானர் ஆகியவற்றை அதிரடிப்படையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த கும்பலை கைது செய்தனர்.
உலர்த்துவதற்கு தயாராக இருந்த 650 கஞ்சா செடிகள், வீட்டு சீலிங்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் நேற்று (09) ஒப்படைத்ததன் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சகர் அடங்கிய பொலிஸ் குழுவொன்று கொழும்பில் இருந்து மொனராகலைக்கு சென்றுள்ளது.
கைதாகிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சப்-இன்ஸ்பெக்டராக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்டதுடன் கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகளின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிகாரிக்கு எதிராக பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் 15 விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் காணப்பட்ட கஞ்சா அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பிலும் விசேட விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் திடீர் சோதனையின் பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அதிகாரியின் திடீர் காணாமல் போனமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.