விடுதலை புலிகளுக்கு அதி நவீன தொழில் நுட்ப கருவிகளை கடத்தியதாக 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட வழக்கில், தமிழ் அரசியல் கைதி 14 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தை அடுத்து 14 வருடங்களின் பின்னர் அரசியல் கைதி கனகரத்தினம் ஆதித்யன் என்பவரே விடுதலை செய்யப்பட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக 2007ஆம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கையடக்க வானொளிகள் உட்பட சில நவீன தொழில் நுட்ப உபகரனங்களை தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமையத்தில் ஒப்படைக்க வவுனியா இரட்டைபெரியகுளத்தடியில் WPC 7711 இலக்க லொரியில் வரும்பொழுது வவுனியா பொலிசாரினால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்ற புலனாய்வுத்துறைக்கு கையளிக்கப்பட்டதாக பொலிசார் குற்றம்சாட்டினர்.
2009 ஆம் ஆண்டு இந்த குற்றச்சாட்டுக்களுக்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரணை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கனகரத்தினத்தின் மகனான ஆதித்யன்; ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து கொழும்பு நீதவான் நீதிமன்றின் நீதிபதியினால்; 14 வருடங்களின் பின்னர் நிரபராதியென இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கின் எதிரியான கனகரத்தினம் ஆதித்யன் சார்பில் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஸ் அணுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மன்றில் ஆஜராகினார்.
இதேவேளை, ஏனைய வழக்குகளில் அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்பான மற்றொரு வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.