2004ஆம் ஆண்டு ஆனந்தசங்கரி செயற்பட்ட பாணியில், 2023ஆம் ஆண்டில் தமது சின்னத்துடன் கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியது.
உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று, தனித்து போட்டியிடுவதென தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்மூலம், 2002 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று மீண்டும் பிளவை சந்தித்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாதையடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்சி வெளியேறியுள்ளது.
தாம் தனித்து போட்டியிடப் போவதாக தமிழ் அரசு கட்சி தெரிவித்து, கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.
இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ.சுமந்திரன், ஆர்.இராகவன் ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி தரப்பில் கருத்து தெரிவித்த போது, மத்திய குழுவில் எடுக்கப்பட்ட முடிவு இருந்தாலும், தாம் தனித்து போட்டியிடும் எண்ணத்தில் இல்லையென்றும், என்ன செய்யலாமென்றும் வினவினார்கள்.
ரெலோ, புளொட் ஆகியன இணைந்து போட்டியிட வேண்டுமென வலியுறுத்தின.
எப்படி போட்டியிடுவது என பேசப்பட்ட போது, கடந்த தேர்தலை எதிர்கொண்டதை போல எதிர்கொள்ளலாம் என ரெலோ கூறியது. எனினும், கடந்த முறை தமக்கு உறுதியளிக்கப்பட்ட சபைகள் வழங்கப்படாததால் அது பற்றி மீள பேசப்பட வேண்டுமென புளொட் தெரிவித்தது.
எனினும், தேர்தல் நெருங்கி விட்டதால், அதைபற்றி பேச அவகாசமில்லையென தமிழ் அரசு கட்சி தெரிவித்தது.
இணக்கமாக செயற்பட தயாரெனில், கிளிநொச்சி மாவட்டதிலுள்ள 3 சபைகளை, 3 கட்சிகளும் ஆளுக்கொன்று வீதம் பகிரலாம் என பங்காளிகள் யோசனை தெரிவித்தனர்.
எனினும், தமிழ் அரசு கட்சி தரப்பு அதில் தயங்கியது. தாங்களே அங்கு செல்ல சிறிதரன் விடுவதில்லை, அதை பற்றி தம்மால் பேச முடியாதென்றார்கள்.
இறுதியில், தமிழ் அரசு கட்சி தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்தது.
இதையடுத்து, 3 கட்சிகளும் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக இரா.சம்பந்தனிடம், சுமந்திரன் தெரிவித்தார்.
பங்காளிக்கட்சிகள் அதில் திருத்தம் செய்து, தமிழ் அரசு கட்சி மாத்திரம் தனித்து போட்டியிடுகிறது, ஏனைய இரண்டும் எப்படி போட்டியிடுவதென விரைவில் அறிவிப்பார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பாக பரந்துபட்ட கூட்டணியொன்றையும் அமைக்கக்கூடும் என்றார்கள்.
ஆரம்பத்திலிருந்தே, 3 கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடலாமென்றே சம்பந்தனும் கருத்து தெரிவித்து வந்தார்.
இந்த முடிவின் மூலம், கூட்டமைப்பு உடையும், கிராம மட்ட மோதல்கள் ஏற்படும், இணைந்து ஆட்சியமைக்க முடியாது, எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என பங்காளிக்கட்சிகள் தெரிவித்தன.
அங்த ஆபத்துக்களை தாமும் உணர்ந்திருப்பதாக தமிழ் அரசு கட்சியினர் தெரிவித்தனர்.
2004ஆம் ஆண்டு இதேவிதமாகவே, கூட்டமைப்பின் சின்னத்துடன் வீ.ஆனந்தசங்கரி வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.