பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவராக உள்ளார். கட்டுமானம், சுரங்கம் உள்ளிட்ட தொழில்களுடன் பெங்களூருவில் ‘கடபோம்ஸ் கென்னல்ஸ்’ என்ற நாய் விற்பனை கடையையும் நடத்தி வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ‘திபெத்தியன் மஸ்டிப்’ இன நாயை ரூ.10 கோடி, ‘அலஸ்கன் மலமுடே’ இன நாயை ரூ.8 கோடி, கொரியாவை சேர்ந்த ‘தோசா மஸ்டிப்ஸ்’ இன நாயை ரூ.1 கோடி கொடுத்து வாங்கினார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சதீஷ், ‘காகேசியன் ஷெப்பர்டு’ இன நாயை ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து ரூ.20 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.
‘கடபோம் ஹைடர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த நாய்க்கு ஒன்றரை வயது ஆகிறது. ‘காகேசியன் ஷெப்பர்டு’ இனத்தை சேர்ந்த இந்த நாய் ரஷ்யா, துருக்கி, ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. 10 முதல் 12 ஆண்டுகள் உயிர் வாழ கூடியது.
இதுகுறித்து சதீஷ் கூறும்போது, ‘‘திருவனந்தபுரத்தில் நடந்த நாய் கண்காட்சியில் ‘கடபோம் ஹைடர்’ நாய் கலந்துக் கொண்டு 32 பதக்கங்களை வென்றது. இந்த மாதம் இந்த நாயை அனைவருக்கும் அறிமுகப்படுத்த விரும்பினேன். ஆனால் தலைமுடி கொட்டி வருவதால் அடுத்த மாதம் அறிமுகப்படுத்துவேன்” என்றார்.