யுவதியொருவர் பெற்றெடுத்த சிசுவை கழிவறை குழியில் வீசிய சம்பவம் தொடர்பில் தெரிபெஹே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
26 வயதான திருமணமாகாத யுவதியொருவர் தெரிபெஹே வைத்தியசாலையின் கழிவறையில் சிசுவை பெற்றெடுத்துள்ளார். பின்னர், சிசுவை ஒரு துணியில் சுற்றி, தனது சகோதரியின் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவர் அதை கழிப்பறை குழியில் எறிந்தார்.
தெரிபேஹெ வெகும்புர பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாத இந்த யுவதி, தவறான உறவினால் கர்ப்பமாகியுள்ளார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை வயிறு வலிப்பதாக வீட்டில் கூறிவிட்டு, தெரிபெஹே வைத்தியசாலைக்கு சென்றிருந்த அவர், வைத்தியரை சந்திக்காமல் கழிவறைக்கு சென்று சிசுவை பிரசவித்துள்ளார்.
அவர் சிசுவை பிரசவித்த வைத்தியசாலை கழிவறையில் இரத்தம் இருந்ததால், சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் எச்சரிக்கையடைந்தது.
வைத்தியசாலை பதிவுகளின் அடிப்படையில் யுவதி அடையாளம் காணப்பட்டு, அவரது முகவரிக்கு மருத்துவ தாதியொருவர் சென்றார்.
யுவதியை பரிசோதித்த பின்னர், அவர் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அந்த யுவதி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சிகிச்சை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
சிசு இறந்து பிரசவமானதால் குழந்தையின் சடலத்தை வீசியதாக யுவதி தெரிவித்தார்.
கழிவறை குழியில் இருந்து குழந்தையின் சடலத்தை மீட்ட பொலிஸார், உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.