கண்டி தலதா மாளிகை மற்றும் பௌத்த மதத்தை அவதூறு செய்யும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர் செபால் அமரசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமரசிங்க நேற்று (05) பொரலஸ்கமுவவில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் பௌத்த மதத்தை அவதூறு செய்தமை தொடர்பாக அவர் மீதும் ஜனக சேனாதிபதி மீதும் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சிஐடிக்கு அறிவுறுத்தியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பொத்துஹெரவில் போலியான ஸ்ரீ தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு எழுதிய கூட்டுக் கடிதத்தில், பௌத்த மதத்தை புண்படுத்தும் வகையிலான கருத்துக்கள் அடங்கிய காணொளி காட்சிகளை சேபால அமரசிங்க சமூக வலைத்தளங்களில் பரப்பினார்.
இது பௌத்த மதத்திற்கும் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ள மகாநாயக்க தேரர்கள், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




