வடமாகாண ஆளுனரால் யாழ் மாநகரசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென பிரதான கட்சிகள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தன.
யாழ் மாநகரசபையின் எதிர்காலம் சிக்கலாகியுள்ள நிலையில், மாநகரசபை கட்சிகளிற்குள் ஒருமித்த நிலைமையை ஏற்படுத்தலாமா என்பதை ஆராய நாளைய சந்திப்பிற்கு அழைப்பு விடுத்ததாக ஆளுனர் அலுவலக தகவல்கள் தெரிவித்தன.
யாழ் மாநகரசபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாத பின்னணியில், முதல்வர் பதவியை வி.மணிவண்ணன் துறந்தார்.
உள்ளூராட்சி மன்றத்தில் தலைவர் ஒருவர் பதவிவிலகி, பின்னர் பதவியேற்ற முதல்வரும் பதவிவிலகினால், மீண்டும் தலைவர் தெரிவு இடம்பெறாது, மாறாக சபை கலையுமென்ற சட்டவிதியை சுட்டிக்காட்டி, யாழ் மாநகரசபைக்கு புதிய முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்திருந்தார்.
யாழ் மாநகரசபையின் எதிர்காலம் பற்றி சட்டமா அதிபரின் கருத்தை கோரவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கட்சிகளின் நிலைப்பாட்டை அறிய, மாநகரசபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களிற்கு வடக்கு ஆளுனர் ஜீவன் தியாகராஜா அழைப்பு விடுத்தார்.
நாளை (5) காலை 10 மணிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும், 10.30 மணிக்கு ஈ.பி.டி.பி உறுப்பினர்களும், 11 மணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சுதந்திரக்கட்சி, ஐ.தே.க, தமிழர் விடுதலை கூட்டணி உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த சந்திப்பிற்கு செல்வதில்லையென பிரதான கட்சிகள் தீர்மானித்துள்ளன.
நாளைய சந்திப்பில் கலந்து கொள்வதில்லையென தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவித்தன.
தமது கட்சி உறுப்பினர்களும் நாளை சந்திப்பில் கலந்து கொள்ள மாட்டார்கள் என ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் மு.ரெமீடியஸ் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தார்.
நாளைய சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளுமா என அந்தக் கட்சியின் பேச்சாளர் க.சுகாஷிடம் தமிழ் பக்கம் வினவியது. நாளைய சந்திப்பு குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என்றார்.
இதேவேளை, நாளைய சந்திப்பில் தாம் கலந்துகொள்ளவுள்ளதாக வி.மணிவண்ணன் தரப்பினர் தெரிவித்தனர்.