தரவை துயிலுமில்லத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இடையூறுகனிகு எதிர்ப்பு தெரிவித்து, மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.
கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட ஆர்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ப.அரியநேத்திரன் ஞா.சிறிநேசன், மாநகர மேயர் தி.சரவணபவன், செங்கலடி பிரதேச சபை தவிசாளர் சி.சர்வானந்தன் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் சி.வவானந்தன் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட பொறுப்பாளர் த.சுரேஸ் ஏற்பாட்டு குழுவின் உறுப்பினர்களான கு.வி.லவக்குமார் எஸ்.நிதர்சன் மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது துயிலும் இல்லத்திற்கு முன்பாக ஒன்று கூடியவர்கள் இராணுவமே வெளியேறு, துயிலும் இல்லங்களை அபகரிக்காதே, வன இலகா என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பு செய்யாதே மாவீரர்களை அவமதிக்காதே எங்கள் நிலம் எமக்கு வேண்டும் ரனில் அரசே பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டாதே என்பன போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.
இதன்போது வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சு வன பாதுகாப்பு தினைக்களம் தொப்பிகல ஒதுக்கு காடு என பெயர் பொறித்து துயிலும் இல்லத்தில் திடிரென நடப்பட்டதாக கூறப்படும் பெயர் பலகையினை ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கல்லால் எறிந்து சேதப்படுத்தி அப்பகுதியில் இருந்து பிடுங்கி அகற்றினார்கள்.அத்துடன் அங்கு நடப்பட்ட மரக்கன்றுகளும் பிடுங்கப்பட்டது.பின்னர் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் ஊடகங்களுக்கு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்தன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் கடந்த நவம்பர் மாதம் 2022 ஆம் ஆண்டு 25 ஆம் 26 ஆம் திகதிகளில் மாவீரர் தினம் தொடர்பான பதாதை காட்சிப்படுத்தப்பட்ட போது அவை கிழித்தெறியப்பட்டிருந்தன. பின்னர் குறித்த பிரதேசத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகளை அரச இராணுவ புலனாய்வாளர்கள் மேற்கொண்டாக தெரிவித்து தரவை ஏற்பாட்டுக் குழுவினருக்கும் புலனாய்வு பிரிவினருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.இவ் விடயம் தொடர்பாக ஊடக சந்திப்பினை ஏற்பாட்டுக் குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.
மரக்கன்றுகள் நடும் விடயத்திற்கும் தமக்கும் தொடர்பில்லையென வாழைச்சேனையில் அமைந்துள்ள வன இலகா தினைக்கள அதிகாரி தெரிவித்திருந்தார்.
தற்போது அதே இடத்தில் குறித்த திணைக்கள அமைச்சின் பெயர் தாங்கிய பெயர் பலகை இடப்பட்டு மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.இவ்விடயம் தொடர்பாக இரு சாராருக்கும் இடையில் மாறி மாறி சச்சரவுகள் இடம்பெறுவது தொடர் கதையாகவுள்ளது.மேற்படி விடயத்தினை கண்டித்தும் குறித்த செயற்பாட்டினை நிறுத்தி தருமாறும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோரிக்கை விடுக்கின்றனர்.எனவே மாவீரர் துயிலுமில்லங்களை ஆக்கிரமிப்பு செய்யும் செயற்பாடுகளை அரசு கைவிடும் வரையில் அரசாங்கத்துடனனான பேச்சுவார்த்தைக்கு செல்வதில்லை என்ற தீர்மானத்தினை தமிழ் கட்சிகள் எடுக்க வேண்டுமென இதன்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர்களினால் வலியுறுத்தப்பட்டது.
-க.ருத்திரன்-