உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் கோஸ்டியான்டைன் பெலியேவ் (50).
ரஷ்ய- உக்ரைன் போரில் தனது குடும்ப உறவுகளை இழந்ததால் மன விரக்தியடைந்து, இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரிற்கு வந்து, காவி உடையணிந்து சாதுவை போன்று வாழ்ந்தார். தனது பெயரை கிருபா பாபா என்று மாற்றிக் கொண்டார். வடமாநிலங்களில் பல்வேறு மடங்கள், புனித தலங்களுக்கு சென்று பூஜை, வழிபாடுகளை நடத்தி வந்தார்.
இதனிடையே இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக வந்த ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், கிருபா பாபாவிற்குமிடையில் பல ஆண்டுகளாக தொடர்பிருந்தது. ரஷ்யா பெண், இந்தியா வந்ததும், இருவரும் உத்தர பிரதேசம் வாரணாசியின் பெலுப்பூர், நாரத் காட் பகுதியிலுள்ள விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தனர்.
கடந்த 25ஆம் திகதி ரஷ்ய பெண் ஊருக்கு வெளியில் இருந்தார். கிருபா பாபா மட்டும் விடுதி அறையில் தங்கியிருந்தார். அவர் அன்று பீகாரிற்கு செல்வதாக விடுதியில் கூறியிருந்தார். ஆனால் அறைக்கதவை திறக்கப்படவில்லை. கடந்த 26ஆம் திகதி அவரது அறைக் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது கிருபா பாபா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து வாரணாசி போலீஸார் கூறியதாவது. உக்ரைனில் வசிக்கும் கிருபா பாபா தாயாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் குடும்ப உறுப்பினர்கள் பலர் உயிரிழந்திருப்பதால், அதனால் ஏற்பட்ட சோகத்தில் கிருபா பாபா தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று அவரது தாயார் கூறினார்.
விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ரஷ்ய பெண்ணிடம் விசாரணை நடத்தினோம். அவர் மீது எந்த சந்தேகமும் எழவில்லை. கிருபா பாபாவின் நம்பிக்கையின்படி இந்து முறைப்படி அவரது இறுதிச் சடங்குகளை நடத்த ரஷ்ய பெண் விரும்பினார்.
ஆனால் கிருபா பாபாவின் தாயார், யாராவது உக்ரைனியரே இறுதிச்சடங்கு செய்ய வேண்டுமென விரும்பினார். இதையடுத்து, காசியில் யாராவது உக்ரைனியர்கள் தங்கியிருக்கிறார்களா என பொலிசார் ஆராய்ந்ததில், அங்குள்ள சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பெண்ணொருவர் படிப்பது தெரிய வந்தது. அவர், கிருபா பாபாவின் இறுதிச்சடங்ளை செய்ய சம்மதித்தார்.
இதன்படி கடந்த 29ஆம் திகதி ரஷ்ய பெண்ணின் முன்னிலையில் ஹரிஷ்சந்த் படித்துறையில் இந்து முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. உக்ரைனிய பல்கலைகழக மாணவி இறுதிச்சடங்குகளை செய்தார்.
அதற்கு பின்னரான சடங்குகளை, உள்ளூர் மதகுருக்களுடன் தொடர்பு கொண்டு ரஷ்ய பெண் செய்துள்ளார்.
இது பற்றி உள்ளூர் மக்கள் தெரிவிக்கையில், கிருபா பாபா காசியில் மரணித்தால் மோட்சம் கிடைக்குமென பலமுறை சொல்வதாக தெரிவித்தனர்.



