உக்ரைன் விஷயத்தில் ரஷ்யாவின் கொள்கை எத்தகையதோ, அதே கொள்கையை இந்தியா விஷயத்தில் சீனா கொண்டிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனுடன் தான் நடத்திய உரையாடல் வீடியோவை ராகுல் காந்தி யூடியூபில் வெளியிட்டுள்ளார். அதில், ராகுல் காந்தி கூறி இருப்பதாவது: ”உக்ரைன் விஷயத்தில் ரஷ்யாவின் கொள்கை எத்தகையதோ, அதே கொள்கையை இந்தியா விஷயத்தில் சீனா கொண்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுடன் வலுவான உறவை உக்ரைன் வைத்துக்கொள்ளக்கூடாது என அந்நாட்டை ரஷ்யா எச்சரித்தது. மீறினால், உங்கள் எல்லையை நாங்கள் மாற்றுவோம் என அது கூறியது. அதைத்தான் தற்போது ரஷ்யா செய்து கொண்டிருக்கிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் கொள்கை எதுவோ, அது இந்தியா மீதான சீனாவின் கொள்கைக்கும் பொருந்தும். சீனா நம்மிடம் என்ன கூறுகிறது? நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதில் கவனமாக இருங்கள் என சீனா கூறுகிறது. இல்லாவிட்டால் உங்கள் புவியியலை நாங்கள் மாற்றுவோம் என அது கூறுகிறது. நாங்கள் லடாக்கிற்குள் நுழைவோம்; அருணாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைவோம் என்கிறது சீனா. ரஷ்யாவின் அணுகுமுறையை சீனா பின்பற்றுகிறது என்பதாகவே நான் பார்க்கிறேன். அதற்கான தளத்தையே சீனா தற்போது உருவாக்கி வருகிறது.
21ம் நூற்றாண்டில் பாதுகாப்பு என்பது ஒரு முழுமையான விஷயமாக மாறிவிட்டது. இந்த விஷயத்தில் நமது அரசின் கணக்கு மிகவும் தவறானது. போருக்கான வரையறை தற்போது மாறிவிட்டது. இப்போது ஒருவர் எல்லையில் மட்டும் போரிடுவது இல்லை. எல்லா இடங்களிலும் போரிட வேண்டும். 21ம் நூற்றாண்டின் மிக முக்கிய விஷயம் என்னவென்றால், உள்நாட்டில் ஒற்றுமை, நல்லிணக்கம் நிலவ வேண்டும். மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. நாட்டிற்கு அமைதியும் தொலைநோக்குப் பார்வையும் அவசியம்.
போரே கூடாது என்பது அல்ல விஷயம். உங்களுக்கு எதிராக போர் நிகழாத அளவு நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் பலவீனமான பொருளாதாரம், குழப்பமான நிலை, தொலைநோக்கு இல்லாத நிலை, வெறுப்பு, கோபம் என இருப்பதை சீனா பார்த்துக்கொண்டிருக்கிறது. எனவே, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உக்ரைனில் இதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
எனவே ஒரு இந்தியராக, போர் வெறி கொண்ட ஒருவராக இருக்க நான் விரும்பவில்லை. ஆனால், எல்லையில் இருக்கும் பிரச்சினைகளுக்கும் உள்நாட்டுக்குள் உள்ள பிரச்சினைகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்வ்கொண்டிருந்தால் பொருளாதாரம் வளராது; வேலைவாய்ப்பு உருவாகாது. இது நமது எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.” இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.