வட கொரியா ஜப்பான் கடலை நோக்கி மூன்று குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, முதல் பாலிஸ்டிக் ஏவுகணை சனிக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 08:00 மணிக்கு (23:00 GMT), இரண்டாவது ஏவுகணை சுமார் 08:14am (23:14 GMT) மணிக்கு ஏவப்பட்டது. ஒரு நிமிடம் கழித்து மூன்றாவது ஏவுகணை புறப்பட்டது .
மூன்று ஏவுகணைகளும் தலைநகர் பியாங்யாங்கின் புறநகர்ப் பகுதிகளில் இருந்து ஏவப்பட்டு 100கிமீ (62 மைல்) உயரத்தை அடைந்து 350கிமீ (217 மைல்) தூரம் பறந்தன.
ஏவுகணைகள் ஜப்பான் கடலில் விழுந்தன. ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே – நாட்டின் கடற்கரையிலிருந்து சுமார் 370 கிமீ (200 கடல் மைல்கள்) நீளமுள்ள நீர்நிலையில் விழுந்ததாக அமைச்சு தெரிவித்தது.
ஏவுகணைகளின் விமானப் பாதைக்கு அருகாமையில் உள்ள விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு எச்சரிக்கைத் தகவல் வழங்கப்பட்டதாகவும், ஆனால் “இந்த நேரத்தில்” எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை என்றும் அமைச்சு கூறியது.
வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை ஏவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள், ஜப்பான், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. கூடுதலாக, இதுபோன்ற பாலிஸ்டிக் சோதனைகள் தொடர்புடைய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுகின்றன என்று பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை ஏவுதலை தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் உறுதிப்படுத்தினர். தங்கள் இராணுவம் நிலைமையை கண்காணித்து வருவதாகக் கூறினர்.
“அமெரிக்காவுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை வலுப்படுத்தும் அதே வேளையில், எங்கள் இராணுவம் முழு தயார் நிலையில் உள்ளது” என்று கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை ஏவப்பட்ட ஏவுகணைகளுடன், இந்த வருடத்தில் மட்டும் வட கொரியா சுமார் 70 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது. அவற்றில் சில கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் (ICBMs) என்பதும் குறிப்பிடத்தக்கது.
2017 க்குப் பிறகு முதல் முறையாக தென் கொரியாவின் வான்வெளியில் வட கொரியா ட்ரோன்களை பறக்கவிட்டதாகக் கூறப்படும் சில நாட்களுக்குப் பிறகு இன்று சனிக்கிழமை ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.