11 ஆண்டுகளுக்கு முன்பு ஜே.சிறிரங்கா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது, அவர் பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், பிரதான பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
சிறிரங்கா பயணித்த கார் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மரத்தில் மோதியதில் காரில் இருந்த அமைச்சரவை பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய நேற்று முன்தினம் (29) இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற போது செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் ரொஷான் சஞ்சீவ மற்றும் தற்போது மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் பிரியதர்ஷன ஹேரத் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சஞ்சீவ தற்போது அவிசாவளை காவல்துறையின் குற்றப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இந்த கார் விபத்து 2011 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி இடம்பெற்றது.
அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்காவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் புஷ்ப குமார (36759) அங்கு உயிரிழந்தார்.
இந்த விபத்தின் பின்னர், செட்டிகுளம் பொலிஸார், உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட்டே காரை ஓட்டிச் சென்றதாக பொய்யான தகவல்களுடன் கூடிய பி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாகக் கூறப்பட்டது.
இது தொடர்பில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட்டின் மனைவி முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே இளங்ககோனிடம் முறைப்பாடு செய்திருந்தார். அதன்படி, விசாரணையில், பல உயர் பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டில், விபத்து தொடர்பான ஆதாரங்களை மாற்றி இறந்த பொலிஸ் சார்ஜன்ட் சாரதியாக செயற்பட்டதாக கூறப்பட்டது தெரியவந்துள்ளது.
பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில், விபத்து இடம்பெற்ற போது பொலிஸ் மா அதிபராக இருந்த மஹிந்த பாலசூரிய வழங்கிய அறிவித்தலின் பிரகாரம், உயிரிழந்த உத்தியோகத்தர் சாரதி என பொலிஸ் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அப்போது செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ரொஷான் சஞ்சீவ ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் அவரை பொலிஸ்மா அதிபர் பாலசூரிய கொழும்புக்கு வரவழைத்து, உயிரிழந்த சார்ஜென்ட் விபத்து நடந்தபோது சாரதியாக இருந்ததாகக் காட்டும் வகையில் காவல்துறை பதிவேடுகள் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
ஆனால் அப்போது ரொஷான் சஞ்சீவ பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியதன் காரணமாக அவர் மீதும் இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




