தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்தில் இருந்து ஒரு தொகுதி ஐஸ் போதைப்பொருளை பேசாலை பொலிஸார் நேற்று (30) இரவு மீட்டுள்ளனர்.
தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (30) இரவு 7.30 மணியளவில் அரச பேரூந்து பயணிகளுடன் கொழும்பு நோக்கி பயணித்தது.
இதன் போது இரவு 8 மணியளவில் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.கே.ஹேரத்,உதவி பொலிஸ் பரிசோதகர் ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோர் தலைமையிலான போலீசார் குறித்த பேரூந்தை இடை நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன் போது குறித்த பேருந்தின் பின் ஆசனத்தின் இருக்கையின் கீழ் காணப்பட்ட பொதி ஒன்றை மீட்டனர்.குறித்த பொதியை சோதனை செய்த போது ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 95 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பின் இருக்கையில் இருந்த பயணி ஒருவர்,மற்றும் சாரதி,நடத்துனர் ஆகியோர் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தினர்.
சுமார் 2 மணித்தியாலங்களின் பின் அவர்கள் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டனர்.
இதனால் குறித்த பேருந்தில் பயணித்த பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் தமது பயணங்களை தொடர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.