நடிகை துனீஷா மரண வழக்கில் ஷீஜன் கானுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்றும், இருவருக்குமான சட்டிங் தகவல் அழிக்கப்பட்டு உள்ளது என்றும் நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலைக்கு தூண்டியதாக சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் இருந்த ஷீஜன் கானை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பிரபல இளம் நடிகை துனீஷா சர்மா (21). வளர்ந்து வரும் நடிகையாக அறியப்பட்ட அவர், கடந்த 24ஆம் திகதி அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சக நடிகர்கள், கலைஞர்களுடன் ஒன்றாக உணவு சாப்பிட்ட பின்னர், திடீரென படப்பிடிப்பு தளத்தில் தூக்கு போட்டு உயிரிழந்தார்.
காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என பரபரப்பாக பேசப்படுகிறது.
நடிகை துனீஷாவை தற்கொலைக்கு தூண்டினார் என்று அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், சக நடிகரான ஷீஜன் கான் என்பவரை வாலிவ் நகர பொலிசார் கைது செய்து, கொலை மற்றும் தற்கொலை என்ற கோணங்களில் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.
துனீஷா மரணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துள்ளனர். இதனை தொடர்ந்து, 15 நாட்கள் பிரிவுக்கு பின்னர் துனீஷாவை மரணத்திக்கு இட்டு சென்ற விசயம் என்ன?, இருவருக்கும் இடையே நடந்தது என்ன? என்பது பற்றி அறிவதற்காக இருவரின் மொபைல் போன்கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை வழக்குடன் தொடர்புடைய 27 பேரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு உள்ளன. படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், நடிகை துனீஷாவின் இறுதி சடங்குகள் கடந்த 27ஆம் திகதி நடந்து முடிந்தன. மீரா சாலையில் உள்ள தகன மேடையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. நடிகை துனீஷாவுக்கு அவரது நண்பர்கள் மற்றும் திரை துறையினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். துனீஷாவின் இறுதி சடங்கு தொடங்கிய சில நிமிடங்களில் அவரது தாயார் துக்கத்தில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
நடிகை துனீஷா இறுதி சடங்கில் ஷீஜன் கானின் சகோதரிகளான சபாக் நாஜ், பலாக் நாஜ் மற்றும் தாயார் கலந்து கொண்டனர். அப்போது, கானின் சகோதரி பலாக் நாஜ் கதறி அழுதுள்ளார். ஷீஜன் கானின் தாயாரும் கண் கலங்கியபடி காணப்பட்டார்.
நடிகர் ஷீஜன் கானின் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைகிற சூழலில் அவரை வாலிவ் பொலிசார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் பொலிசார் தெரிவித்த தகவலில், நடிகர் ஷீஜன் கானுக்கு, நடிகை துனீஷா தவிர்த்து வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. துனீஷா மரண வழக்கில் கைது செய்யும்போது, கான் தனது மொபைல் போனில் பல்வேறு சட்டிங் செய்த தகவல்களை அழித்து உள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
விசாரணையின்போது, முறையாக அவர் ஒத்துழைக்கவில்லை என்றும், இரகசிய காதலியுடனான சட்டிங் பற்றி கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக தகவல்களை மாற்றி, மாற்றி கூறியுள்ளார் என தெரிவித்து உள்ளனர்.
அழிக்கப்பட்ட பல சட்டிங் தகவல்கள் மீண்டும் கிடைத்தபோது, அதில் பல பெண்களுடன் நடிகர் ஷீஜன் பேசியுள்ளது தெரிய வந்துள்ளது. அவரது மொபைல் போனில் பல முக்கிய சட்டிங் தகவல்கள் உள்ளன என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
உறவை முறித்து கொண்ட பின்பு, துனீஷாவை அவர் தவிர்க்க தொடங்கியுள்ளார். துனீஷா தொடர்ச்சியாக மெசெஜ் செய்து வந்துள்ளார். ஆனால், அதற்கு பதிலளிக்காமல் அவர் தவிர்த்து வந்துள்ளார் என போலீசார் நேற்று தெரிவித்து இருந்தனர்.
துனிஷா இறப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு ஷீஜனுடன் ஒப்பனை அறையில் 15 நிமிடம் உரையாடியதாகவும் போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இருவருக்கும் இடையே 250 பக்க வாட்ஸ்அப் அரட்டைகள் இருப்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில், நடிகர் ஷீஜன் கானுக்கு 14 நாட்கள் விசாரணை காவலுக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
துனீஷாவின் தாயார் வனிதா பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று கூறும்போது, கொலைக்கான சந்தேகம் உள்ளது. ஷீஜனின் அறையில் துனீஷா எப்படி இருக்க முடியும்? துனீஷாவை ஷீஜன் மட்டுமே தூக்கி கொண்டு வெளியே வந்துள்ளார். ஆம்புலன்சையோ, மருத்துவர்களையோ அவர் கூப்பிடவில்லை. துனீஷாவை ஹிஜாப் அணியும்படி அவர் கூறினார் என்று குற்றச்சாட்டாக கூறியுள்ளார். துனீஷாவை, ஷீஜன் கன்னத்தில் அறைந்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
“ஷீஜன் படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள் உட்கொள்வதாக துனிஷா என்னிடம் தெரிவித்தார். துனிஷாவின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டன. ஷீஜன் அவளை இஸ்லாத்தை பின்பற்றும்படி வற்புறுத்தினான். அவள் அன்று காலை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டாள், ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது, எங்களுக்குத் தெரியாது” என்று அவர் கூறினார்.
வனிதா, “ஷீஜனுக்கு தண்டனை கிடைக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன். துனிஷா அவனது போனை ஒருமுறை சோதித்து பார்த்தபோது அவன் தன்னை ஏமாற்றுவதை கண்டுகொண்டாள். ஷீஜனை விசாரித்ததில், அவர் அவளை அறைந்தார். என் மகளுக்கு எந்த நோயும் இல்லை. நான் ஷீஜனை விடமாட்டேன்“ என்றார்.