தோட்டத் தொழிலாளர்களிடம் சந்தா சேகரித்து அமைக்கப்பட்ட தொழிற்சங்க கலாசாரத்தின் ஊடாக வளர்த்தெடுக்கப்பட்டதே மலையக அரசியல் கலாசாரம். 200 வயதை அடையும் மலையகத்தில் மாற்று அரசியல் கலாசாரத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் சந்தா சேர்க்காத தொழிற்சங்கமாக மலையக பாட்டாளிகள் அரங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
மலையக அரசியல் அரங்கத்தின் ஏற்பாட்டில் ‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான புறப்பாடு’ எனும் தலைப்பில் ஒரு நாள் செயலமர்வு ஹட்டனில் நேற்று (30/12) நடைபெற்றது. இதன்போது இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே திலகராஜ் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை மலையகத்திற்கு 200 வயதாகிறது. அதன அரசியலுக்கு 100 வயதாகிறது.அந்த 100 வருட அரசியலுக்கு அடிநாதமாக தொழிற்சங்கங் கட்டமைப்பே இருந்துவந்துள்ளது. கடந்த நூறு ஆண்டு காலமாக தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்த உழைப்பின் ஒரு பகுதியை மாதாந்தம் சந்தாவாகச் செலுத்தியே மலையக அரசியலை நூற்றாண்டு காலமாக நகர்த்தி வந்துள்ளனர். மலையகத்தின் மூன்றாவது நூற்றாண்டிலாது உழைக்கும் தொழிலாளர்களின் சந்த்யாவில் தங்கி இருக்காது அன்வரூம் பங்கேற்று இயங்கும் அரசியலை முன்னெடுக்க மலையகம் தயாராக வேண்டும்.
அத்தகைய ஓர் அரசியல் முன்வைப்புக்கு ஆரம்பமாக மலையக அரசியல் அரங்கம் தமது தொழிற்சங்க பிரிவாக மலையகப் பாட்டாளிகள் அரங்கம் எனும் அமைப்பை உருவாக்கவும் தோட்டத் தொழிலாளர்களிடம் சந்தா வசூலிக்காமல் அதனை முன்னெடுபதற்கும் தீர்மானித்துள்ளது.
2023 முதல் செயற்படவுள்ள இந்தத் தொழிற்சங்கத்தின் உத்தியோகத்தர் சபை விபரம் விரைவில் அறிவிக்கப்படும். சலுகைகளையும் நலன்புரி விடையங்களையும் காட்டி தொழிலாளர்களின் அடிப்படை உரிமை விடயங்களை விட்டுக்கொடுத்துள்ள நிலையில் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் அதனை வென்றெடுக்கவுமாக புதிய தொழிற்சங்க கலாசாரத்தை மலையகப் பாட்டாளிகள் அரங்கம் திகழும் எனவும் தெரிவித்துள்ளார்.